ரங்கநாயகி
குறுங்கதை

ரொம்ப நாளைக்கப்புறம் ஊரிலிருந்து கல்யாணியின் போன் வந்தது. வழக்கமான விசாரிப்புகளுக்குப் பிறகு, அமெரிக்காவிலிருந்து ரெங்கா வந்திருப்பதைச் சொன்னான். மனசோடு சாரலடித்தது.
ரெங்காவின் அப்பா, வீட்டை அவள் பெயருக்கு எழுதி வைத்திருப்பதை தன் பெயருக்கு மாற்றித்தரச் சொல்லி ரெங்காவின் தம்பி விடாது சண்டை போடுவதையும், இந்தத் தடவை திரும்பி அமெரிக்கா போவதற்குள் அந்த வேலையை முடித்து விட்டு போவது என்ற முடிவோடுதான் அவள் வந்திருக்கிறாள் என்றும், அப்படி அவள் வீட்டை தம்பி பெயருக்கு எழுதிவிட்டால், அவன், அவனுக்கு இருக்கிற ஊர்பட்ட கடனுக்கு உடனே விற்றுக் காசாக்கி விடுவான், அதனால் தான், வாடகைக்கு வேறு வீட்டை பார்க்க வேண்டிய கட்டாயம் வந்திருக்கிறதென்றும் சொன்னான் கல்யாணி.
எனக்கு அவன் அவள் வீட்டைப் பற்றிச் சொன்னது எதுவும் காதுக்குள் போன அளவுக்குக் கூட மனசுக்குள் போகவில்லை. அதனால் அவன் வாடகை வீடு தேட இருப்பதையெல்லாம் பற்றிக் கேட்காமல் “ரெங்கா நல்லாயிருக்காளாடா“ என்று ஒற்றைக் கேள்வியை மட்டும் கேட்டு அவன் பதிலுக்குக் காத்திருந்தேன்.
டாலர் துட்டு ஒடம்புல மின்னுதுடா. ஆனா மொகத்துல முன்னமிருந்த ஒளியைக் காணோம்., வெளிச்சத்துக்கு நடுவுல கொஞ்சமா இருட்டு இருக்குற மாதிரி, எல்லாம் இருந்தும் உள்ளுக்குள்ள ஏதோ ஒரு குறையிருக்கும் போல. அவ சிரிக்கும் போது கூட விட்டேத்தியா சிரிக்கிற மாதிரி தான் இருக்கு. ஏன் இப்படின்னு கேக்க எனக்குத் தெம்பில்லை. பொசுக்குன்னு ஓங்கூட இல்லாதது தான் அந்தக் குறைன்னு அவ சொன்னா, நீ தாங்குவியோ இல்லையோ தெரியாது, ஆனா என்னால தாங்க முடியாதுடா. ஒனக்கு கெடைச்ச இந்தப் பாழாப்போன வேலை அவ கல்யாணத்துக்கு முன்னாடி கெடைச்சிருக்கலாம்.
இரண்டு பேருக்கும் நடுவில் ஒரு அடர்ந்த மௌனம் குடிகொண்டது.
விடு கல்யாணி. குறையேயில்லாத மனசு யாருக்குத் தான் இருக்கு. ஒவ்வொருத்தருக்கு ஒன்னொன்னு.
இன்னோன்னு சொன்ன நீ கேப்பியா.. கல்யாணி என்னிடம் கேட்டான்.
என்ன..?
அவ போறதுக்கு முன்னாடி ஒரு தரம் நீ ஊருக்கு வந்துட்டுப் போயேன்.
மீண்டும் நான் மௌனமாக இருந்தேன். ஒரிரு நிமிடத்துக்கப்புறமாய்ச் சொன்னேன்.
இல்லை கல்யாணி. அவ அங்கன இருக்கும் போது என்னால வர முடியாது. இப்படி ஓம் மூலமா கொஞ்சம் கொஞ்சம் அவளைப் பத்திப் பேசினா, அதுவே எனக்குப் போதும். அதுக்கும் மேலே ஆசைப் படக் கூடாது. அது யாருக்குமே நல்லதில்லை.
சரியாத் தான் சொல்ற நீ. இத்தனை வருஷத்துக்கப்புறம் நீங்க ஒருத்தரை ஒருத்தர் பாத்து என்ன பண்ணப் போறீங்க. அதுக்குப் பாக்காமலயே இருக்கலாம். அவ போனப்புறம் சொல்றேன். ஒரு எட்டு வந்துட்டு போ. அவளைப் பாத்த எங்கண்ணுக்கு ஒன்னையும் பாக்கனும்ன்னு தோணுது. அவ்ளோ தான். சரி நான் வைக்கிறேன்
என்று சொல்லி போனை வைத்துவிட்டான். இன்றைக்கு இரவு நாங்கள் இரண்டு பேருமே தூங்கப் போவதில்லை என்பதும் மட்டும் உறுதியாகத் தெரிந்தது.