மெம்பர்ஷிப்
குறுங்கதை

இதே வேலையாப் போச்சு.. கண்ணாடி இல்லாம இன்னைக்கு எப்படி ஆபீஸ்ல வேலை பாக்கப் போறீங்களோ.. எத்தனை வாட்டி சொல்றது.. சல்லிசான வெலையில இன்னோன்னு வாங்கி ஆபீஸ் ட்ராயர்ல போட்டு வைங்கன்னா கேக்குறீங்களா..
தேய்ந்த ரெக்கார்டாய் மனைவியின் பாட்டை மொபைலில் கேட்டுக் கேட்டுச் சலித்தவனாய் இன்று இந்த கண்ணாடிக் கடையில் வந்து நிற்பவனிடம் அந்த சேல்ஸ் மேன்
இரண்டா வாங்கிக்கோங்க சார்.. தொள்ளாயிரத்துத் தொண்ணூத்தொம்பது ப்ளஸ் ஜிஎஸ்டி.. ஆயிரத்துச் சொச்சத்துல ஸ்பேரோட .. உங்க பாயிண்ட் எவ்ளோ.. ஒன் பாயிண்ட் டூ பைவா.. எப்போ கடைசியா செக் பண்ணீங்க.. ஒரு வருஷம் இருக்குமா.. கரெக்ட்.. ஒவ்வொரு வருஷமும் கண்டிப்பா செக் பண்ணிக்கணும்.. ஏற்கனவே வச்சிருக்கிற கண்ணாடியை கழட்டாமா போடுறீங்கதானே.. இல்லையா.. அப்பப்ப தான் போடுவீங்களா.. ரெகுலரா போடணும் சார். அப்பதான் பாயிண்ட் கூடாம இருக்கும். வயசென்ன சார்.. நாப்பத்தியெட்டா. அப்ப கண்டிப்பா கூடியிருக்கும்.. இன்னோரு தரம் செக் பண்றது நல்லது.. இங்க ப்ரீயா செக் பண்ணிக்கலாம்.. கொஞ்சம் வெயிட் பண்ணீங்கன்னா டெக்னீசியன் வந்துருவாங்க.. அதுக்குள்ள நீங்க ப்ரேம் செலக்ட் பண்ணீருங்க..
சட்டையில் பெஸ்ட் சேல்ஸ் மேனாப்தி மன்த் வில்லையை மொதல்லேயே பாத்துருக்கனும்.. இல்லைன்னா இப்படித்தான்..
கண்ணாடிக் கதவுக்குள் மாட்டித் தொங்கிக் கொண்டிருந்த ப்ரேம்களை ஒவ்வொன்றாய் பார்த்தான். இருப்பதிலேயே விலை குறைவாய் இருந்ததே ட்ரிப்பிள் நைனுக்குத்தான் இருந்தது. மல்டி செயின் ரெஸ்டாரண்ட் போல செயின் கண்ணாடிக் கடைகளும் வந்து கஸ்டமர்க்ளின் பாக்கெட்டுக்குள் அல்லது டெபிட் அல்லது க்ரெடிட் கார்டுக்குள் உள்ள அத்தனை காசையும் சுலபத்தில் வழித்தெடுத்து விடுகிறார்கள்..
கோல்ட் மெம்பர்ஷிப் வாங்கிக்கோங்க சார். ஒரு வருஷத்துக்கு நைன் ஹண்ட்ர்ட் ப்ளஸ் ஜிஎஸ்டி.. எப்ப கண்ணாடி வாங்கினாலும் டொண்டி பர்ஸண்ட் டிஸ்கவுண்ட் கிடைக்கும்.
வருஷத்துல எத்தனை தடவய்யா நா கண்ணாடி வாங்கப் போறேன்.. இதே மூணு வருஷத்துக்கப்புறம் வந்திருக்கேன்.. அதுவும் வாங்கி வச்சுருக்கிறத அடிக்கடி மறந்துர்றேன்றதால..
உங்களுக்கு மட்டுமில்லை சார்.. உங்க பேமிலி மெம்பர்ஸ் யாருக்கு வேணும்ன்னாலும் வாங்கலாம்.. அப்பவும் டிஸ்கவுண்ட் உண்டு..
வேணாம்ப்பா..
நிறைய பெனிபிட்ஸ் இருக்குங்க சார். கூலர்ஸ்ல முப்பது பர்செண்ட்.. வருஷாந்திர சேல்ஸ் மேளாவுல அம்பது பர்சண்ட் வரை
வேணான்னு ஒரு தடவ சொன்னாப் புரியாதாய்யா உனக்கு,,
சொல்றது எங்கடமை சார். டெக்னீசியன் வந்துட்டாங்க சார்.. நீங்க உள்ளாற ரூமுக்குள்ள போங்க..
கதவு போலிருந்த ஸ்க்ரீனை விலக்கி உள்ளே போனால் அங்கிருந்த இளம்பெண் அவன் கண்ணாடி போடாமலேயே அவனுக்கு அவ்வளவு தெரிந்தாள்.. எல்லா டெஸ்டும் முடிந்த பின்னால் ஒன் பாயிண்ட் பைவ் என்று வெள்ளைப் பேப்பரில் எழுதிவிட்டு
ஆர் யூ இன் யுவர் பார்ட்டியெயிட் .. ஐ காண்ட் பிலீவ். யூ ஆர் லுக்கிங் வெரி யங்.. பட் யுவர் ஐ பவர் ஸே ஸோ.. ஐம்பத்தஞ்சு வயசு வரையிலும் பவர் கூடிட்டே இருக்கும், அப்படி கூட வேண்டாம்ன்னு நெனைச்சா வியர் யுவர் க்ளாஸஸ் ரெகுலர்லி. கெட் தி ஸ்பேர் க்ளாஸஸ் ட்டூ.. ஆர் யூ ய கோல்டு மெம்பர்.. பை இட்.. யூ வில் கெட் ஹெவி டிஸ்கவுண்ட்..
அவள் கிளி போல கொஞ்சிக் கொஞ்சிப் பேச அவன் மெதுவாய்
கோல்ட் மெம்பர்ஷிப் எவ்ளோ... என்று கேட்டவாறு பேண்ட் பாக்கெட்டிலிருந்த ஹாண்ட் கர்ச்சீப்பை எடுத்தான்..
§§§§§§