மிடாஸ் டச்...
குறுங்கதை

இதோ வெள்ளையும் சொள்ளையுமா அலையறானே.. அவம் போன மாசம் என்ன செஞ்சாம் தெரியுமா..
யாரு அந்த கலெக்ட்ரேட்டுல வேலை பாக்காரே அவரா..
அவராம்ல அவரு.. அவஞ் செஞ்ச காரியத்துக்கு அவனை அவன்னு சொல்றதே அவனுக்கு கொடுக்குற பெரிய மருவாதை..
அப்படி என்ன தான் செஞ்சுபுட்டாம் அந்தாளு..
அதையேன் கேக்க.. ரோட்டுல நம்ம ஆண்டாளு மக செம்பகம் இந்தா இங்கிட்டுருந்து வந்துகிட்டுருந்தப்ப எதுத்தா மாரி வந்தாம் அந்தாளு.. வந்தவம் சும்மா போலாம்ல்ல.. கொழுப்பெடுத்தவன்.. நட்ட நடு ரோடுன்னு பாக்காம .. ரோட்டுல வாரவம் போரவம்லாம் பாக்கேனேன்னும் பாக்காம, அந்தப் புள்ளையோட இடப்பக்க நெஞ்சை புடிச்சி அமுக்கிட்டாம்.. அந்தப் புள்ள அவமானம் தாங்காம அந்த இடத்துலேயே உக்காந்துருச்சு.. அப்பயும் அவம் கையை எடுக்கலை. சத்தமில்லாம அழுவுது அந்தப் புள்ள.. அப்பத்தான் அவஞ் செஞ்ச காரியத்தை பாத்த ரெண்டு மூனு பேரு அத்தாளை செம சாத்து சாத்தீட்டாய்ங்க.
போலீஸ்ல புடிச்சுக் கொடுக்கலையா..
எல்லாரும் சேந்து அடிச்ச அடியில அவனுக்கு வாயி மூஞ்சியெல்லாம் ரெத்தம். போலீஸ் வந்தா அடிச்சவனெல்லாம் தனக்கு எதுனாச்சும் ஆயிருமோன்னு பயந்துட்டு செம்பவத்தை வீட்டுக்கு அனுப்பிச்சுட்டானுங்க..
அடப்பாவமே.. அப்புறம்..
அப்புறம் என்னாடி அப்புறம் செம்பவம் நாளைஞ்சு நாளைக்கு வீட்டை விட்டு வெளியவே வராம இருந்தா. அதுக்கம்பின்னாடி பொழப்பைப் பாக்கனும்ன்னு வேலைக்கும் போவ ஆரம்பிச்சிட்டா.. இது என்னவோ ஒன்னுமே நடக்காத மாதிரி சுத்திக்கிட்டு இருக்கு.. இவம் பொண்டாட்டிதான் இவஞ்செஞ்ச காரியத்தினால ஒரே அவமானமா போச்சின்னு புள்ளையோட அவ அம்மை வீட்டுக்கு போயிட்டா..
பொண்டாட்டி கூட இருந்தப்பவே எவ மாரைத் தொடலாம்ன்னு அலைஞ்சவம் அவ போன பின்னாடி சும்மாவா இருக்காம்..
விழுந்த அடி கொஞ்சமா நஞ்சமா அது அதுக்குள்ளாற மறந்தா போயிருக்கும்.. இல்லை இனிமே அங்க இங்க கைய வைச்சா மத்தவங்க தான் சும்மா இருப்பாங்களா. நாயடி பேயடி அடிச்சு சாவடிச்சிற மாட்டாங்க.. அந்த பயத்துல தான் மண்ணு மாதிரி அலையுதாம் போல..
நீயென்னவோ இப்படிச் சொல்லுதே.. ஆனா முந்தா நேத்து செம்பவம் என்ன செஞ்சா தெரியுமா.. ரோட்டுல முன்னப் பின்ன யாரும் நடமாடாத நேரத்துல இந்த ஆளு எதுக்க வரும்போது அந்த ஆளை கையெடுத்து கும்பிடுல்லா போடுதா..
என்னாடி சொல்லுத.. செம்பவம் இந்தாளை கையைடுத்து கும்பிட்டாளா.. அடி நாசமத்து போறவ.. நெசமாத்தான் சொல்லுதியா.. இந்த எளவெடுத்தவனை எதுக்கு கும்பிடுதாளாம் .. எதுனாச்சும் சொன்னாளாட்டீ..
என்னென்னவோ சொன்னா.. அவளுக்கு மாரு பூரா சுருள் சுருளா கட்டி கட்டியா இருந்துச்சாம்.. டாக்டர்கிட்ட காட்டினப்ப மாரையே அறுத்து எடுத்துறனும்ன்னு சொன்னாராம். அந்தாளு தொட்ட இந்த ஒரு வாரத்துலேயே அதெல்லாம் குறைய ஆரம்பிச்சருச்சாம்.. அவரு வேணும்ன்னே தொடலையாம்.. அவரு கை பட்டா நாள் கணக்குல உடம்புல இருக்குற வியாதி காணாமப் போயிருமாம். அதுக்குத்தான் தொட்டாராம்.. அப்படி இப்படின்னு என்னென்னவோ சொன்னா.. அப்படியெல்லாம் கூட நடக்குமா..
அடப் போடி போக்கத்தவளே.. அவந்தொட்டானாம் இவளுக்கு நோயி சரியாயிடுச்சாம்.. அவந் தொட்டதை உள்ளுக்குள்ளாற இரசிச்சிருப்பா இந்த மானங்கெட்ட சிறுக்கி மவ..
சச்ச … செம்பவம் நல்ல பொண்ணு.. அப்படியெல்லாஞ் செய்யாது..
இல்லைன்றியா.. ஒனக்குந்தான வவுத்துக்குள்ளாற கட்டி இருக்குன்னு டாக்டர் சொன்னாரு.. வேணும்னனா அவனை ஒன் வயித்தத் தடவச் சொல்லேன்.. ஓங்கட்டி காணாமப் போவுதாங்காட்டின்னு பாப்பம்..
சீச்சீ.. அடுத்தவம் கை ஏம் மேல படுறதா.. நா மாட்டம்பா..
அப்படிச் சொல்லு ..
அப்ப செம்பவம் சொன்னது பொய்யின்றியா..
இருந்தாலும் இருக்கும்டீ.. காலம் ரொம்ப பொல்லாதது பாத்துக்க.. ஒழுங்கா தண்ணிய புடிக்க வந்தியா வூடு போய் சேந்தியான்னு இருந்தேன்னா நல்லது பாத்துக்க.. அதை விட்டுப்புட்டு அவம் இவ மாரைப் புடிச்சான் இவ அவனைப் பாத்து ஈன்னு இளிச்சான்னு பேசிட்டு இருந்தா நாமளும் அவனைத் தொட வுடுவமான்னு தான் தோணும்..
அதுவுஞ்சரி தான். நா வாரேன்.. வூட்டுல கொள்ளை வேலை பாக்கியிருக்கு..