நெனைச்சுப் பாத்தா எல்லாம் அல்கோ ..
குறுங்கதை

சாப்பிட்டவுடனே படுத்துத் தூங்கிவிடுவதாலேயே உன் உடம்பில் வியாதிகள் ஓவ்வொன்றாய் குடி புக ஆரம்பித்திருக்கின்றன.. இரவுச் சாப்பாட்டிற்கு பின் ஒரு நடை போய்விட்டு வந்து படு.. என்ற மருத்துவரின் அறிவுரையின் படி நேற்றும் நான் நடந்து வர போயிருந்தேன்.
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை இவையெல்லாம் பாரதி செம்மை மாதர்க்கென ஒதுக்கீடு வேறு செய்து விட்டாரில்லையா. அவையைல்லாம் நமக்கெதற்கென எப்போதும் தலையை குனிந்து நிலத்தை நோக்கியவாறே நடப்பது பதின் வயதிலிருந்தே பழக்கம்.
எதிரில் யாரோ வருவது போலிருக்க மெல்ல தலையை உயர்த்திப் பார்த்தேன். அது ஒரு கம்ப்யூட்டர் அல்கோரிதம். ஆம்.
அட.. அல்காரிதமெல்லாம் கூட இரவில் நடக்க வருகிறதா. என்று ஆச்சர்யம் குறையாமல் நான் பார்த்த நேரத்திலேயே அது என்னுடன் பேசிப் பழக யத்தனித்தது.
ஹாய்.! ஐயாம் ஆன்ட் காலனி ஆப்டிமைஸேஷன் அல்கோ. யுவர் குட் நேம் ப்ளீஸ் ..
அந்தப் பெயரைக் கேட்டதும் நானடைந்த ஆச்சர்யத்தில் எனக்குள் பழக்கப்பட்டிருந்த கான்வர்ஸேஷன் ட்ரெய்னிங்க் கூட மறந்து போய் அதற்கு பதில் கூட சொல்லாமல் நான் என் பாட்டுக்கு நடந்து கொண்டிருந்தேன்.
அல்கோ, வேதாளத்தை வீழ்த்தும் விக்ரமாதித்யனைப் போல, சற்றும் மனம் தளராமல் என்னைத் தொடர ஆரம்பித்து, என்னிடம் மேலும் கேள்விகளை கேட்கத் துவங்கியது.
எதிரெதிரே சந்திக்கும் இருவர் எப்படி உரையாடலைத் துவங்க வேண்டுமென்பதைப் போன்ற டீப் லேர்னிங் பயிற்சிகள் உனக்கு தரப்படவில்லையா.. என்று கேட்டுவிட்டு என் பதிலுக்காக காத்திருந்தது.
வாட் ஈஸ் திஸ் நான்ஸெனஸ். இதற்குத் தான் நான் யாருடனும் நடப்பதே இல்லை. என் தனித்த இரவின் சுகத்தைப் பறிப்பதற்காகவே இது என்னுடன் உரையாட நினைக்கிறதா என்ற எண்ணம் எழுந்து முந்தைய ஆச்சர்யம் காணாமற் போய் ஒருவித எரிச்சல் உண்டாகத் தொடங்கியிருந்தது.
அதையும் தாண்டி அந்த அல்கோ என்னையும் ஒரு அல்கோ என்றே எண்ணித் தான் தன் உரையாடலைத் தொடர்கிறது என்ற விசயமும் மெல்ல எனக்குப் புரிபட ஆரம்பித்தது.
என்னையும் உன்னைப் போல ஒரு அல்காரிதமென எண்ணிக் கொண்டு விட்டாயா.. முதன்முறை என் மௌனம் தவிர்த்து நான் அதனுடன் உரையாடத் துவங்கினேன்.
அப்படியானால் நீ அல்காரிதமில்லை எனச் சொல்கிறாயா.. இது அல்காரிதம்.
பார்த்தால் எப்படித் தெரிகிறது உனக்கு.
ஒரு அல்காரிதத்திற்கு எதையுமே பார்த்தவுடன் தெரிந்து கொள்ள முடியாது. ஒவ்வொரு கேள்வியாய் கேட்டு வரும் பதில்களை ஆராய்ந்து கிடைத்த பதிலுக்குத் தக்க அடுத்த கேள்வியை உருவாக்கி..
நிறுத்து.. நிறுத்து.. நானொரு மனிதன்..
உண்மையாகத்தான் சொல்கிறாயா.. நீ மனிதனா.. மனிதனென்றால் தலை உடல் கை கால்கள் கண்கள் மூக்கு வாய் எல்லாம் இருக்க வேண்டுமே..
என்ன.. என்னிடம் இவையெல்லாம் இல்லையா.. இல்லை உனக்குத் தெரியவில்லையா..
எனக்கே ஒரு முறை என் மீது சந்தேகம் வந்துவிட்டது. நான் கையைத் தூக்கி என் தலையை என் கண்களை என் மூக்கை வாயைத் தொட முயன்றேன். எதுவுமே தட்டுப்படவே இல்லை. என் கைகளும் என் கண்களுக்கு தென்படவே இல்லை.. இல்லை எதுவுமே தெரியவே இல்லை. எல்லாமே இருளாய் அந்தகாரமாய் இருந்தது.