சிக்கலில்லா நூற்கண்டு
குறுங்கதை

இன்னும் கொஞ்சம் நேரம் இருந்துட்டு அப்புறமா போகலாம்ல்லா.
இரஞ்சிதம் கேட்ட போது மனசுக்கு இறுக்கமாகவும் இளக்கமாகவும் இருந்தது. அவளுக்காகவாவது இன்னும் கொஞ்சம் நேரம் இருக்கலாம் தான். ஆனால் போய்ச் சேர்ந்ததும் வெடுக் வெடுக்கென வந்து விழும் லெச்சுமியின் கேள்விகளுக்கு பதில் சொல்வது அத்தனை இலகுவான விசயமில்லை என்பது மட்டும் தான் அந்த இறுக்கத்தை, இளக்கத்தையெல்லாம் பின்னுக்குத் தள்ளி விட்டுவிட்டு முன்னால் வந்து நின்றது.
இருந்தாலும் ஆசையாசையாய் கேட்பவளின் மனதை சட்டென நோகச் செய்யத் துணிவில்லாமல் கிளம்பியவன் அப்படியே உட்கார்ந்தேன்.
வந்ததிலிருந்தே எதையுமே பேசாமல் வெறுமென தரையைப் பார்த்து உட்கார்ந்திருந்தது போல மீண்டும் இருவருக்கும் இடையே ஒரு வெறும் மௌனம் வந்து மீண்டும் குடி கொண்டது.
ஒரு காலத்தில் கால நேரம் எதுவும் தெரியாமல் அல்லது யோசிக்காமல் பேசிக் கொண்டேயிருந்த இருவருக்கும் இப்படி மௌனத்தை மட்டும் ஓருவருக்கொருவர் பறிமாறிக் கொள்ளும் காலமொன்று வருமென்பது அப்போது தெரியத்தான் இல்லை.
நான் மௌனமாய் அமர்ந்திருக்க இரஞ்சு மீண்டும் மடியில் வைத்திருந்த உல்லன் உருண்டையிலிருந்து நூலின் முனையை இடக் கையில் பிடித்து வலக் கையில் வைத்திருந்த ஒரு கொக்கி ஊசியில் கொடுத்துக் கொடுத்து நுணுக்கி நுணுக்கி எதையோ பின்னிக் கொண்டிருந்தாள். நான் அவளைப் பார்த்துக் கொண்டிருக்கையில் என்னை ஒரு முறை ஏறெடுத்துப் பார்த்துவிட்டு “ஸ்வெட்டர்” என்று ஒற்றை வார்த்தை சொன்னவள் மீண்டும் அந்த உல்லன் நூலை திருகித் திருகி தன் பின்னலைத் தொடர்ந்தாள்.
இந்த ஊரில் அடிக்கிற அல்லது அடிக்கப்போகிற குளிருக்கு ஸ்வெட்டரெல்லாம் தேவைப்படாதென்பது தெரியாமலா பின்னிக் கொண்டிருக்கிறாள். ஸ்வெட்டரின் தேவையை விட அதைப் பின்னுதலின் தேவை அவளுக்கு அதிகமாய் இருப்பதைப் போல இருந்தது அவள் பின்னிக் கொண்டிருப்பது. அவள் மனதுக்குள் நடக்கிற அத்தனைப் போராட்டங்களையும் இப்படி உல்லனைப் பின்னி பின்னி மறந்து கொண்டிருக்கிறாளோ என்று தோன்றியது. ஒன்றிலிந்து தப்பிக் கொள்ள இன்னொன்றிற்குள் தன்னை நுழைத்துக் கொள்வதென்பது இரஞ்சுவைப் போல ஒன்றிரண்டு பேருக்குத் தான் வாய்க்கிறது. நான் லெச்சுமியிடமிருந்து அவளது வெடுக்வெடுக்கென்ற கேள்விகளிலிருந்து அக் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாத என் இயலாமையிலிருந்துத் தப்பித்துக் கொள்ளவா இரஞ்சிதத்தைப் பார்க்க வருகிறேன். பார்க்க வந்தும் ஒன்றுமே பேசாமல் உட்கார்ந்து கொள்கிறேன்.
மீண்டும் கிளம்பலாம் என்று நினைக்கையில்
இந்த நூல்கண்டு முடியப் போகுது. அடுத்த நூலை இதை மாதிரி பந்தா உருட்டனும். கொஞ்சம் ஹெல்ப் பண்ண முடியுமா என்று இரஞ்சு கேட்க, என் மௌனத்தை உடைக்காமல் தலையாட்டி சம்மதித்தேன்.
பக்கத்திலிருந்த அலமாரியைத் திறந்தாள். அலமாரி முழுவதும் கலர்க்கலராய் பிரிக்காத உல்லன் நூல்கள். ஒரு நூல்க் கொத்தை எடுத்தவள், “இப்படியே வைச்சு பின்னினா சிக்கல் விழுந்துரும். பந்து போல உருட்டி வைச்சுக்கிட்டாத் தான் சிக்கு விழாம வேகமா பின்ன முடியும். இதை ஒருத்தர் பிடிச்சுக்கிட்டா, இன்னொருத்தர் வேகமா பந்து போல உருட்டுறதுக்கு வசதியாயிருக்கும்“ என்று சொல்லி அதை என் கையில் கொடுத்தாள்.
நூலின் ஆரம்ப நுனியை எடுத்து உருட்ட ஆரம்பித்தாள். நூல் பந்து முதலில் கோலிக்குண்டு சைஸுக்கு உருண்டது. பின்னர் எலுமிச்சை பழ அளவுக்கு. கொஞ்ச நேரத்தில் ஆரஞ்சுப் பழ அளவுக்கு வந்தது. அவள் உருட்டிக் கொண்டே இருந்தாள். என் கையில் வைத்திருந்த நூல்கொத்தில் சிக்கல் விழாமல் இருக்க அதை கவனமாகப் பிடித்துக்கொண்டு, அதே சமயத்தில் அவள் உருட்டும் வேகத்துக்கு நூலை விட்டுக் கொண்டுமிருந்தேன். ஒரு சிறிய கால்பந்தளவுக்கு மொத்த நூலும் உருண்டு முடிந்ததும் என்னை நிமிரந்து பார்த்து சிரித்தாள் இரஞ்சிதம்.
வந்தவுடனே ஆரம்பிச்சிருந்தா சிக்கு விழாம இன்னும் இரண்டு அல்லது மூணு பந்து செஞ்சிருக்கலாமே என்று அவளிடம் கேட்டேன்.
சில சமயம் சிக்கு விழுறதும், . விழுந்த சிக்கலை அவிழ்க்கிறதும் ரொம்ப அவசியமில்லையா என்று கேட்டாள் அவள்.
அதுவும் சரிதான்.