உள் உருளும் குமிழி
குறுங்கதை

கூடவே நடந்து வந்த செண்பகத்தக்காள் சொன்னாள்..
இன்னும் எத்தனை நாளைக்குத் தான் இப்படியே தனியாளா நிக்கப்போற கண்ணா... சித்திக்கும் நாளுக்கு நாள் வயசென்ன குறைஞ்சுட்டா வருது. இல்லை உனக்கு குறைஞ்சிட்டே போவுதா. இத்தனை நாளாத் தான் கடமை கடமைன்னு இருந்துட்ட. அதான் வசந்தியையைம், லெச்சுமியையும் நல்ல இடத்துல கட்டிக் கொடுத்திட்டியே.. அப்புறமென்ன.. இனியாவது ஒனக்கொரு தொணை வேணுன்டா. சித்தியும் இருக்கப்போற கொஞ்ச நஞ்ச காலத்துக்காவது ரெஸ்ட் எடுக்கட்டுமே. அவளும் பதிமூனு வயசுலேருந்து அடுப்படியே கதின்னும், அதிலேருந்து விடுதலைன்னு ஒன்னே இல்லாமலுந்தான கெடக்கா. அதுக்காகவாவது நீயொரு கல்யாணத்தை பண்ணிக்கப்பா.
நான் ஒன்றுமே சொல்லாது நடந்தேன். பஸ் ஸ்டாப்புக்கு இன்னும் கொஞ்சம் தூரமிருந்தது. அது வரைக்கும் அக்காள் இதையேத் தான் சொல்லப் போகிறாள் என்பது புரிந்துவிட்டது.
இத்தனை வயசுக்கப்புறம் நமக்கு யாரு பொண்ணு தருவான்னு யோசிக்கிறயா.. அப்படி என்ன வயசாயிடுச்சு ஒனக்கு. இந்த டிசம்பர் வந்தா முப்பத்தாறு முடியுதா. அதெல்லாம் கொடுப்பாங்க. நீ உம்முன்னு சொல்லு. நான் ஆயிரம் பொண்ணை கொண்டாறேன்.
அக்காள் நிறுத்தாமல் பேசிக் கொண்டே வந்தாள். நான் உம்மென்று சொல்லாமலேயே பல பெண் வீட்டார்களை என்னைத் தேடி வரவைத்திருந்தாள். பல காரணங்களுக்காக அவையெல்லாம் தட்டிப் போயிருந்தன. அவற்றில் முக்கிய காரணமாய் நான்தான் இருந்தேன் என்று செண்பகத்தக்காளுக்கு நன்றாகவே தெரியத்தான் செய்யும்.
எங்கள் பெரியம்மாவின் மகளென்றாலும் கூட, எங்களோடு எங்கள் வீட்டில் எங்கள் மூவருக்கும் மூத்த அக்களாய் வளர்ந்தவள் செண்பகத்தக்காள். அவளுக்கு கல்யாணமாகிப் போனதிலிருந்து தான் எங்களோடு இல்லை அவள். இருந்தாலும் எப்போதுமே அவள் தான் அம்மாவுக்கு மூத்த மகள். எங்கள் அனைவரின் விசயமும் அவள் நன்றாகவே அறிவாள். நான் ஏன் கல்யாணம் பண்ணாமலிருக்கிறேன் என்பது உட்பட.
பஸ் ஸ்டாப் வந்துவிட்டது. என் கையிலிருந்த அவளது இரண்டாவது பையை வாங்க கை நீட்டினாள்.
கல்யாணமாகி ஏழு வருஷமாச்சு. இன்னைக்கு வரைக்கும் வீட்டுக்கு வந்தா என்னை வெறுங்கையா திரும்ப அனுப்புறதே இல்லை சித்தி. எங்கம்மா இருந்திருந்தா கூட இதெல்லாம் செய்வாளோன்னு தெரியலை. அவ மனசு நோகாம பாத்துக்கோடா.
ஏற்கனவே நொந்து போயிருக்கிற என்னோட மனசை என்ன செய்ய அக்கா..
கேட்க நினைத்தும் கேட்காமலேயே நின்றேன்.
பஸ் ஸ்டாப்பிலிருந்த இரண்டு ட்யூப் லைட்டுகளில் ஒன்று எரியாமல் பாதிக்குப் பாதி இருளில் கிடந்தது. அக்காள் நகர்ந்து வெளிச்சத்தில் நின்று கொண்டாள்.
கண்ணா.. நீ இன்னும் அந்தப் புள்ள நெனைப்பாவே இருக்கன்னு எனக்கும் தெரியும். இருந்தாலும் சொல்றேன்.
இங்கன எல்லாருக்கும் எல்லாமும் அவங்க அவங்க இஷ்டப்படி நடக்குறதில்லை. நடக்கனும்ன்னு கட்டாயமும் இல்லை. நடக்காத ஒரு விசயத்துக்காக நடக்கிற நடக்க இருக்கிற வாழ்க்கையை இப்படி தனியாளா கடத்தனும்ங்கிறது ரொம்ப பெரிய தண்டனை. அது ஒனக்கு வேண்டாம்.
இப்ப நீ தண்டிச்சிட்டு இருக்கிறது ஒன்னை மட்டுமில்லை. சித்தியையும் சேத்து தான். தாம் பெத்த ஒத்த ஆம்பளைப் புள்ள இப்படி தன்னந்தனியா நிக்கறதைப் பாத்துட்டு மனசை கல்லாக்கிக்கிட்டு பேசாம கெடக்க அவ என்ன இரும்புல செஞ்ச மனுஷியா.
நீ கேக்க மாட்டேன்னு தான் அவளுக்கு உள்ளுக்குள்ள கெடந்து கொதிக்குற அத்தனை சொல்லையும் வாய்ப்பூட்டு போட்டு அடைச்சி வைச்சிருக்கா. அதனால தான் நீயும் வீம்புல சுத்துறதா நெனைச்சுக்கிட்டு சுத்திக்கிட்டு இருக்க.
என்னைக்காவது ஒரு நா அவ வாய் தொறக்கத்தான் போறா. அப்ப அவ கேக்குற கேள்விகளுக்கெல்லாம் உன்னால பதில் சொல்ல முடியாம நிக்கப் போற. அந்த அவஸ்தை ஒனக்கும் வேண்டாம். அவளுக்கும் வேண்டாம்னனு தான் நா வார போறதும் போற போதும் ஓங்கிட்ட கரையா கரைச்சு பாக்கன்.
எனக்குள் உள்ளுக்குள் ஒன்று உடைந்தது. அந்நேரம் பார்த்து அக்காள் போகும் பஸ்ஸும் வந்தது.