இன்றைக்கு வந்தவன்
குறுங்கதை

என்ன மிஸ்டர் குமாரவேல்.. இன்னிக்கு எந்த பில்டர்ஸ் வந்தான்.. என்ன ரேட் தர்றதா சொன்னான்..
செடியாயுமில்லாமல் மரமாயுமில்லாமல் இரண்டும் கெட்டானாய் வளர்ந்திருந்த செம்பருத்திக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த குமாரவேல் புன்னகையுடன் திரும்பி பார்த்தார். காலை நடைப் பயிற்சியை சாவகாசமாக பதினோரு மணிக்கு போகும் ரிட்டையர்டு டீயார்டீஓ சீனியர் செகரெட்டரியேட் க்ளர்க் சுந்தரமூர்த்தி, வீட்டின் முன்பக்க கேட்டில் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு நின்றிருந்தார்.
இப்ப வரைக்கும் யாருமில்லை. அப்படி ஏன்தான் இந்த இடம் எல்லார் கண்ணையும் உறுத்துதுன்னு தெர்லை மிஸ்டர் சுந்தரமூர்த்தி.
ப்ரைம் ப்ளேஸ். சென்டராப்தி சிட்டி. ஒரு க்ரவுண்ட்டுக்கு மேலே இருக்குமா.. நீங்க ஒண்டியாளு.. என்ன பண்ணப் போறீங்க குமாரவேல். நல்ல விலை வந்தா பேசாம கொடுத்துருங்களேன்..
அதனாலதான கொடுக்க மாட்டேன்றேன். நா ஒண்டியாளு. எங்கப்பா நா பொறந்தப்ப ஸ்டேஷன் பக்கத்துல செண்ட் நூத்தி இருபது ரூபான்னு வாங்கிப் போட்டது..அப்ப ஊரு இப்படி பெரிசா இல்லை. இரயில்வே ஸ்டேஷன் ஊரை விட்டு வெளியே இருந்துச்சு.
இன்னிக்கு ஊருக்கு நட்ட நடுவுல இருக்கு குமாரவேல். உங்க வீட்டை சுத்தி வாங்கினவன்ல்லாம் ஷாப்பிங் காம்ளெக்ஸ் கட்டி வாடகைக்கு விட்டுட்டான். என்ன காசு தெரியுமா..
திரும்பவும் அதேதான். நா ஒண்டியாளு. காசை வச்சு நான் என்ன பண்ண.. தேவைக்கு பென்ஷன் வர்றது. மனசு திருப்திக்கு நாலைஞ்சு செடி கொடிங்க. புள்ளைங்க மாதிரி வளக்கறேன் அதுங்களை. இதையெல்லாம் நாசம் பண்ணி அப்பார்ட்மெண்ட்டோ காம்ப்ளெக்ஸோ கட்டிவுட்டு வேற சம்பாதிக்கனுமா. சொல்லுங்க சுந்தரமூர்த்தி ..
இன்றைக்கு சுந்தரமூர்த்தி..நேற்று ஸ்டேஷன் மாஸ்டர். நாளைக்கு வேறு யாராவது வந்து கேட்பார்கள். இத்தனைக்கும் காரணம் உள்ளூர் வெளியூர் ரியல் எஸ்டேட் பில்டர்ஸ். ஊருக்கு நடுவில் பதினொரு சென்ட்டுக்கு இடமிருந்தால் அதை கவனிக்க ஒரேயொரு அறுபத்தைந்து வயசு மனிதர் மட்டுமிருந்தால் விட்டுவைப்பார்களா என்ன. இப்படித்தான் வந்துவிடுகிறார்கள்.
இடத்தைக் கொடுத்துருங்க மிஸ்டர் வேல். ட்டூ சீ தர்றோம். அப்புறம் இங்க கட்டுற அப்பாரட்மெண்ட்ல உங்களுக்கு ஒரு த்ரீ பிஎச்கே. ஃபிப்த் ஃப்ளோர்ல.. இதை விட ஒரு நல்ல டீல் வேற யாரும் தர மாட்டாங்க..
இதையே ஒவ்வொரு பில்டரும் ஒவ்வொரு மாதிரி சொன்னார்கள். எப்படியாவது இந்த இடத்தில் ஒரு ஐந்து மாடிக்கு ஒரு அப்பார்ட்மெண்ட். மாடிக்கு நான்கு த்ரீ பிஎச்கே வீதம் இருபது வீடுகளையாவது கட்டி, வீடு ஒவ்வொன்றையும் அறுபது எழுபது இலட்சங்களுக்கு விலை வைத்து விற்று விடுவார்கள்.
தினத்துக்கும் உள்ளூரிலிருந்தோ அல்லது வெளியூரிலிருந்தோ யாரவது காரைப் போட்டுக்கொண்டு வந்துவிடுதிறார்கள். ஏதாவது நைச்சியமாய் பேசி இடத்தைத் தரும்படி கேட்கிறார்கள். எல்லாருக்கும் ஒரே பதில் தான். இடத்தைத் தர்றதா இல்லை. உள்ளூர் கவுன்ஸிலரிலிருந்து எம்எல்ஏ எம்பி வரைக்கும் சிபாரிசுக்கு வேறு ஆள் பிடித்துக் கொண்டு வந்துவிடுகிறார்கள். எல்லாருக்கும் கட் போகும் போலிருக்கிறது. போன மாசம் நீளமான கருநீல பியெம்டபிளயூவில் வந்த வட நாட்டு பில்டர் கொஞ்சம் மிரட்டிவிட்டுக் கூட போனான்.
யோவ் கிழவா. ஒனக்கப்புறம் இது அனாமத்துச் சொத்து. லீகல் ஹெயர்ன்னு யாரும் கெடையாது. ஞாபகமிருக்கா. பசங்ககிட்ட கண்ண காட்டுனம்னா ஒன்ன பொட்டுன்னு போட்ருவாங்க.. தெர்யுமா..
வடநாட்டு பில்டராயிருந்தாலும் தமிழ் அட்சர சுத்தத்தில் இருந்தது. ரொம்ப காலமாய் இங்கேயே தொழில் செய்பவனாய் இருக்கலாம். நான் அதற்கெல்லாம் பயப்படுபவனில்லை. ஆனால் ஒன்று நிச்சயம். இந்த வீட்டை யாருக்கும் விற்கப் போவதில்லை. அனாதைப் பள்ளிக்கூடத்துக்குத் தான். அவர்களும் இதை விற்க முடியாதபடிக்கு வில் எழுதி வைக்க வேண்டும். சீக்கிரம் செய்ய வேண்டும்.
இன்றைக்குத்தான் இதுவரை யாரும் வரவில்லை. இல்லையெனில் இதற்குள் எவனாவது வந்திருப்பான்.
அப்போது பின்பக்கத்தில் யாரோ சுவரேறிக் குதிக்கும் சத்தம் கேட்டது. குமாரவேல் மெதுவாய் பின்பக்கம் போனார். அங்கே ஸ்கூல் யூனிபாரத்தில் பதினைந்து பதினாறு வயது பையன் ஒருவன் மாமரத்தில் ஏற முயற்சித்துக் கொண்டிருந்தான். மாங்காய் திருட வந்திருப்பான் போல.
என்ன தம்பி. மாங்கா பறிக்கனுமா.. மரமேறத் தெரியுமா.. பாத்து ஏறனும். விழுந்துறாத என்ன. உனக்கு எவ்வளவு வேணுமோ அவ்வளவும் பறிச்சிக்க. எனக்கு இரண்டே இரண்டு கொடுத்துரு..
அந்தப் பையன் ஒன்றும் பேசாமலிருந்தான். சுவரோரமாய் கிழே கிடந்த ஸ்கூல் பையை நோக்கி நடந்து அதை எடுத்தான். அதைத் திறந்து அதற்குள்ளிருந்து எதையோ தேடி எடுத்தான்.
அது ஒரு இல்லீகல் இம்ப்போர்ட்டட் ரக லோடட் பாயிண்ட் ஃபார்ட்டி ஃபோர் மேக்னம் பிஸ்டல்.
§§§§§§