முடிவுரை

உங்களுக்கு என் வாழ்வில் நான் சந்தித்த ஒரு எட்டு தேவதைகளை அவர்களின் கதைகளை மிக இரத்தினச் சுருக்கமாக சொல்லியிருக்கிறேன்.
இன்று ஏன் முடித்துக் கொண்டீர்கள். அவ்வளவு தானா நீங்கள் சந்தித்த தேவதைகள் என்று கேட்டால் இல்லை எனபது தான் என் ஒற்றை வார்த்தை பதில்.
நாற்பத்தைந்து ஆண்டு கால வாழ்வில் என் வாழ்வின் பயணத்தில் வழியெங்கும் பல தேவதைகளை கண்டவன் நான்.
நான் சிறுவனாய் வளர்ந்த போது என்னைப் பாராட்டி சீராட்டி வளர்த்த என் அம்மா பெரியம்மா சித்தி மற்றும் இரு அக்காக்கள் அனைவருமே என் தேவதைகள்தான். எனக்குப் பின் பிறந்த என தங்கை அவளுக்கும் எனக்கும் சிறு வயதில் நடக்கும் சண்டைகளில் அடிக்கடி நான் கை நீட்டி அடித்திருக்கிறேன் என்பது இன்றளவும் என்னை வதைக்கிற விசயம். அவளைப் பற்றி நிறைய எழுதலாம். அவளும் ஒரு தேவதையே.
இன்று எங்கள் தலைமுறைக் குழந்தைகள் அனைவருக்கும் பெண்குழந்தைகள் இருக்கின்றனர். வீட்டிற்கொரு தேவதை பிறந்திருக்கின்றனர். அதிலொருவள் திருமண வயதை எட்டிப் பிடித்து விட்டாள். அவளை என் தோள் மீதும் மார் மீதும் போட்டு வளர்த்தவன் நான்.
என்னைக் கரம் பிடித்தவள் இன்னொரு தேவதை என நான் உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை.
அந்த எட்டு பேரைத் தவிர உன் குடும்பத்தினர் மட்டுந்தான் தேவதையா என்று வினவுவீராயின் இல்லை. என்னை என் வாழ்வின் வழியில் ஆற்றுப் படுத்திய அன்பைச் செலுத்திய ஆளுமை செலுத்திய வெறும் பார்வையாளர்களாய்ப் பார்த்துச் சென்ற அத்தனைப் பெண்களும் என் தேவதைகளே.
பெண்ணைத் தேவதையெனக் கொள்ளுதலோ அல்லது தெய்வமென கும்பிடுதலோ அவர்கள் மீதான அழுத்தத்தை திணிக்கிற செயலென்று பின்னூட்டமிட்ட செந்தூர் பாண்டியனுக்கு நான் பதிலெழுதியைப் போல பெண்களைப் போற்றுதல் என்பதோ வணங்குதல் என்பதோ நம் மீது நாம் கொண்ட கர்வத்தை அழிக்கும் செயலாகவே பார்க்கிறேன். இதனை ஒவ்வொருவரும் செய்ய வேண்டும். அப்போதுதான் நிருபையாவுக்கு நிகழந்த வன்கொடுமை இன்னுமொரு சகோதரிக்கு நிகழாதிருக்கும்.
என் முகத்தை நேரில் பார்க்காமல் என் மீது அனபு செலுத்தும் அக்காக்களுக்கும் தங்கைகளுக்கும் இவனை தன் நண்பனென மதிக்கும் அத்தனை நல்லுள்ளங்களுக்கும் இந்த தேவதைக் கதைகள் சமர்ப்பணம்.