தேவதை - 8

பெண்கல்வி என்பது இன்றியமையாத ஒன்றென்று எல்லாரும் ஏன் சொல்கிறோம். கல்வி மட்டுமே பெண்ணுக்கு முழுச் சுதந்திரமளிக்க முடியுமென்பதால். ஆனால் கல்வியில் சிறந்து விளங்கும் அனைத்துப் பெண்களுக்கும் சுதந்திரம் கிடைத்து விட்டதா. இல்லையென்பதுதான் உண்மை.
என்னுடைய எட்டாம் தேவதை படிப்பில் சுட்டி. எந்த வகுப்பிலென்றாலும் முதல் மாணவி. படிப்பதை மட்டும் குறிக்கோளாய் கொண்டவள்.
தந்தை தன் மக்களின் நல்வாழ்விற்கென தன் அண்ணன் தம்பிகளின் குடும்பத்தின் பொறுப்பில் தன் குடும்பத்தை விட்டு விட்டு வெளி நாடு சென்று சம்பாதிக்க போய்விட்டார். உறவினர்களோ ஆதரவையும் அரவணைப்பையும் தருவதற்குப் பதிலாக ஆளுமைகளை நிலைநாட்டத் துவங்கினர். தன் குடும்பப் பாரம்பரியங்களைக் காரணங்களாய்க் காட்டி இவள் மீது பெரும் அடக்கு முறைகளை கட்டவிழ்க்கிறார்கள்.
ஒரு பெண் வளரும் விதமே அவளை அவளுடைய எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் காரணிகளாகின்றன. அச்சூழ்நிலை அவர்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கிடுக்கிப்பிடி போட்டு இறுக்கிப் பிடிக்கும் பொழுது பெரும்பாலான பெண்கள் அதற்கு கட்டுப்பட்டு தங்கள் பலங்களை இழந்து விடுவதுண்டு. ஆனால் அப்படியானதொரு சூழலில் வளர்ந்த இவளோ தன்னைத் தன் கல்விதான் இவ்விதமான இக்கட்டுகளிலிருந்து காப்பாற்றுமென முடிவெடுத்தாள். வெறித்தனமாக படித்தாள்.
முதலில் பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள். பின் கல்லூரி செல்ல அனுமதி கிடைக்காத நிலையில் அருகிலிருந்த பாலிடெக்னிக்கில் தொழிற்கல்விக்கான டிப்ளமோ. பின் அங்கேயே கல்வி கற்பிக்கும் ஆசிரியப் பணி. ஆசிரியர் பணியிலிருந்தவாறே பார்ட் டைமாக தொழிற்கல்விக்கான பட்டப் படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு எனக் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் கல்வித் தகுதியை உயர்த்தினாள். அத்தனையும் உறவினர்களின் கட்டுப்பாடுகளுக்கு நடுவில். அக்கட்டுப்பாடுகள் மட்டுமில்லையெனில் இவள் இன்னும் பல உயரங்களைத் தொட்டிருக்கக் கூடும்.
இடையில் திருமணம். அந்தத் திருமணமாவது அவளுக்கு அவள் சிறுவயதில் கிட்டாத சுதந்திரத்தை தந்ததா எனில் இல்லை. இது மேலும் அவள் சங்கிலிகளை இறுக்கிப் பிணைத்தது. அவள் வருமானத்தைக் காரணங்காட்டி வேலைக்குச் செல்ல அனுமதித்தது மட்டுமே ஒரேயொரு ஆறுதல். ஆனால் அந்த ஆறுதலே அவளுக்கு இடையூறாயும் ஆனது.
உலகத்து எல்லா ஆண்களிடமுள்ள ஒரு தவறான எண்ணம், அது தானாய் வந்ததா இல்லை தலைமுறை தலைமுறையாய் யாரேனும் அவனுக்குப் போதித்தார்களா என்று தெரியவில்லை, ஒன்று உண்டு. பெண்ணை சதா கண்காணித்து வந்தால் அவள் தமக்கு அடிமையாய் இருப்பாளென்ற எண்ணமே அது. முற்றிலும் தவறு. பெண்ணை எப்பொதும் கண்காணித்து வருதல் எனபது அவளுக்குச் சிறை. விடாது சிறைப்பட்ட ஜீவன் சிறையினின்று விடுதலை பெற சீறியெழும். ஐந்தறிவு ஜீவன்களுக்கே இது பொருந்துமெனில் ஆறறிவு பெண் எப்படிப் பொறுப்பாள். சீறியெழுவாள்.
இவள் கணவன் வேலைக்கு அனுப்பியவன் அவளின் ஒவ்வொரு காரியத்திற்கும் தப்புத் தப்பாய்க் காரணம் கற்பிக்க ஆரம்பித்தான். சந்தேகம் எனபது மெல்லக் கொல்லுமொரு நோய். அது அவனைக் கொல்ல ஆரம்பித்தது. இவளையும் சேர்த்து. இவளைத் துனபங்கள் சூழ ஆரம்பித்த பொழுது கிடைத்த ஒளிக்கீற்றாய் இவர்களுக்கு மகள் பிறந்தாள்.
மேலும் அடக்குமுறைகள் பிறப்பித்தான். இவளும் தன் குடும்பத்திற்காய் அவர்களின் மரியாதைக்காய் அட்ங்கிப் போனவள் இப்போது தன் மகளின் எதிர்காலம் கருதி அடங்கிப் போகிறாள். சரி நான் வேலைக்குப் போவதுதான் உனக்குப் பிரச்சினை என்றால் நான் வேலைக்குப் போகவில்லை என்றால் அதற்கும் சந்தேகம் கொண்டான்.
எப்போதும் எல்லா நேரமும் தகாத வார்த்தைகளால் சுட்டான். எல்லாம் பொறுத்தாள் தன் பிள்ளைக்காக. இன்னும் பொறுத்துக் கொண்டிருக்கிறாள்.
இன்று இவள் ஒரு பெரிய வேலையில் இருக்கிறாள். நல்ல சம்பாத்தியம். இவள் இன்று நினைத்தால் அவனைத் தூக்கி எறிந்து விட்டு திருமண பந்தத்தை விட்டு வெளியேறி விடுதலையாய் இருக்க முடியும். ஆனால் அது தன் குழந்தையைப் பாதிக்கும் என்றே எல்லாம் பொறுக்கிறாள்.
அவளை அப்படி பொறுத்துக் கொண்டு மேலும் சித்திரவதைக்கு உள்ளாகி இருப்பதை வலியுறுத்துவது அவள் உறவுகள் மட்டுமில்லை. நாமும் தான். நம் சமூகத்தின் பொறுப்பு அதில் அதிகம்.
மண பந்தத்திலிருந்து விலகி தனித்து வாழும் ஒரு பெண்ணுக்கு நாம் என்ன மதிப்பளித்து வருகிறோம். ஒரு பெண்ணை ஒரு போகப் பொருளாக மட்டும் பார்க்கப் பழகியிருக்கும் சமுகத்தின் போக்கே இவளைப் போல் உள்ளோர்களுக்கு இன்னும் விடுதலையைத் தரவில்லை.
இவள் ஏன் தேவதை என்கிறேன் என்று கேட்கிறீர்களா.
ஒரு கணவனும் மனைவியும் பிரியலாம். ஆனால் ஒரு தந்தையும் தாயும் பிரிந்தால் அப் பெண்பிள்ளையின் கதியென்ன என்று யோசித்ததாலேயே அவள் தேவதை.
அதற்காக அவள் பொருந்தாத இத்திருமண பந்தத்தில் பொருந்தியே இருக்க வேண்டுமென நான் ஒரு போதும் சொல்ல மாட்டேன். இப் பந்தத்தை உதறி எழுந்து வந்தாளெனில் அப்போதும் நான் அவளை தேவதை என்றே அழைப்பேன்.
தேவதையின் சிறகுகள் பறப்பதற்குத்தானே தவிர தன் கண்ணீரைத் துடைப்பதற்கல்ல.