தேவதை - 7

இந்த ஏழாம் தேவதையின் திருவயிற்றில் உதித்தவர்கள் முதலில் ஒரு ஆண்பிள்ளை, இரண்டாவதும் மூன்றாவதும் பெண் பிள்ளைகள் என மொத்தம் மூன்று பிள்ளைகள். ஆனால் இவளை அம்மாவென்று அழைக்கும் குழந்தைகள் மொத்தம் எட்டு. அண்ணி என அழைக்கும் குழந்தைகள் மூன்று.
அவளின் கணவனுக்கு இரண்டு தம்பிகள். மூத்த அக்காள் ஒருத்தியும் உண்டு. அந்த மூத்த அக்காளுக்கு திருமணமான ஒரு வருடத்திலேயே அக்காள் கணவன், தான் ஒன்றிற்கும் இலாயக்கில்லாதவனென ஒரு வேலைக்கும் போய்ச் சம்பாதிக்க இயலாதவனென எல்லாருக்கும் நிரூபித்து விட்டான். இவளின் மாமனாரும் சரி கணவரும் சரி இந்த அக்காள் புருஷனுக்கு ஏதாகிலும் வருமானம் வரும் தொழில் ஒன்றைத் தொடங்கித் தருவார்கள். அதை மூன்று மாதங்களில் தொலைத்து விட்டு வருவான் என்ற கதையாய் நடந்தவண்ணம் இருந்தது.
இந்த மூத்த அக்காளும் காடாறு மாதம் நாடாறு மாதம் என தன் கணவனுடன் அவன் வீட்டில் ஆறு மாதம் தன் தகப்பன் வீட்டில் ஆறு மாதமென தன் திருமண வாழ்வின் முதல் ஏழெட்டு வருடங்களைக் கழித்து மூன்று பிளளைகளுக்குத் தாயாகி இனி தன் கணவனுடன் வாழவே முடியாதெனும் நிலையில் தன் தகப்பன் வீட்டில் நிரந்தரமாய் வாழ தன் மூன்று பிள்ளைகளுடன் வந்து விட்டாள்.
இதனிடையில் இவளுடைய கணவனுக்கு அடுத்த தம்பியான இரண்டாமவனுக்கு திருமணம் நடைபெற்றது. அவன் மும்பையின் எலெக்ட்ரிக் கம்பெனி ஒன்றில் வேலை பார்ப்பவனாய் இருந்தான். அவனுக்கு இவள் மேல் கொள்ளைப் பாசம். இவளும் இவளது கணவரும் அவனை தம் பிள்ளை போலவே அன்பு செலுத்தி வந்தனர். அவனுக்கு ஆணொன்றும் பெண்ணொன்றுமாய் இரண்டு குழந்தைகள். அவனின் இரண்டாம் குழந்தையான பெண்பிள்ளைக்கு ஒரு வயது கூட நிரம்பாத நிலையில் ஒருநாள் மும்பையிலிருந்து கடும் வயிற்று வலியால் துடித்தவாறு வீட்டிற்கு வந்தவனை ஒரு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். எந்த மருத்துவமும் பலனின்றி மூன்றாம் நாளில் இவளுடைய கையைப் பிடித்தவாறே இறந்து போனான்.
வீட்டில் இவளுடைய குழந்தைகள் மூன்று மூத்த அக்காளின் குழந்தைகள் மூன்று இறந்து போன தம்பியின் குழந்தைகள் இரண்டென எட்டுக் குழந்தைகளும் ஒன்றாய் வளர்ந்தன.
கணவரின் அக்காவும் சரி இறந்து போன தம்பியின் மனைவியும் சரி வீட்டின் எந்த வேலைகளையும் பார்ப்பதுமில்லை. செய்ய முனைவதுமில்லை. அவர்கள் தங்கள் துயரங்களைப் பிடித்துக் கொண்டு அப்படியே இருந்து விட, வீட்டின் மூத்த மருமகளான இவளுக்கு பொறுப்புகள் கூடிப் போயின.
ஏற்கனவே இந்த பொறுப்புகளைச் செவ்வன செய்து வந்தவளுக்கு உதவியாய் இவர்களிருவரும் இல்லாமல் அவள் செய்யும் வேலைகளில் குற்றங்குறை சொல்வதில் மட்டும் முனைப்பாய் இருந்தார்கள். மூத்த அக்காளோ தான் தன் மாமியார் வீட்டில் பட்ட துயரங்களுக்கு மருந்திடுவதாய் இவளைத் துயரப்படுத்துவதிலேயே குறியாய் இருந்தாள். இட்ட அடி குற்றம் எடுத்த அடி தவறு என்று எல்லாவற்றிலும் குறை கண்டவாறு இருந்தாள்.
இரண்டாவது மருமகளோ எப்போதும் தன் நிலைமயை எண்ணிக் கண்ணீர் வடித்தவாறிருந்தாள். இவளுடைய கணவரோ அவளின் எதிர்காலத்தைக் குறித்து யோசித்து அவளை டீச்சர் ட்ரெயினிங்க் படிக்க வைத்தார். பக்கத்து ஊரில் தனியார் ட்ரெயினங்க் ஸ்கூலில் சேர்த்து விட்டார். அவளுக்கும் வீட்டின் பொறுப்பு துறந்தது. படிக்கக் கிளம்பி விட்டாள்.
இவளுடைய மாமனார் தன் இரண்டாம் பிள்ளையின் திடீர் இறப்பில் மனமுடைந்து போனார். அதனால் அவர் உடல்நிலை சீர் குலைந்தது. அவரும் நேராய் ஒரே வருடத்தில் இறந்து போக அவருக்கு வந்து கொண்டிருந்த பென்ஷன் தொகை பாதியாய்க் குறைந்ததோடு மட்டுமில்லாமல் அது முழுவதும் மாமியாரின் சேமிப்புக் கணக்கிற்கு செல்லத் துவங்கியது. மாமியோரோ அதிலிருந்து ஒரு பைசாவும் செலவழிப்பதில்லை எல்லாம் வாழாதிருக்கும் என் மகளுக்கே என்று சொல்லிவிட்டாள்.
ஏற்கனவே குடும்பத்தில் உறுப்பினர்கள் கூடியதால் இருந்த வேலைப்பளுவுடன் இப்போது பணவரவும் குறைந்து போக கணவர் கொஞ்சம் அல்லாடிப் போனார். இவள்தான் அவருக்குத் தைரியத்தைக் கொடுத்தாள். சமாளிக்கலாம் என்றாள். நான் வேண்டுமெனில் ஏதாகிலும் வேலைக்குச் செல்லவா என்றாள். அவள் கணவர் சரியெனச் சொல்ல கணவரின் தாயாரோ மறுத்துவிட்டார். இவள் போய் விட்டால் வீட்டு வேலைகளை எல்லாம் யார் பார்ப்பது என்று கேள்வி எழுப்பினார். இவள் நிலை குலைந்தாள். கடைசி வரை அவளை வேலைக்கு அனுப்ப இயலாமலே போனது.
அதிகாலையில் எழுவாள். மாமியாருக்கும் நார்த்தனாருக்கும் தேவையான எல்லா வேலைகளையும் செய்வாள். பின் குழந்தைகளை பள்ளிக்கனுப்ப சாப்பாடு தயாரிப்பாள். ஒவ்வொரு குழந்தைக்கும் தேவையானவற்றையெல்லாம் சரிவர கவனிப்பாள். குழந்தைகள் பள்ளி சென்றதும் வீட்டின் மற்ற வேலைகளான துணி துவைப்பது (வீட்டின் அனைவரது துணிகளையும் இவள்தான் துவைக்க வேண்டும். மெஷினெல்லாம் கிடையாது) பாத்திரங்கழுவுவது என அனைத்து வீட்டு வேலைகளும். பின் மதிய உணவு தயாரிப்பாள். அனைவருக்கும் பரிமாறி இவள் உணவுண்ண வரும்பொழுது கிட்டத்தட்ட சாயங்காலமாயிருக்கும். பள்ளி சென்ற குழந்தைகள் ஒவ்வொன்றாய் வர ஆரம்பிப்பார்கள். அவர்களை கவனிக்க வேண்டும். பின் இரவு உணவுக்கான ஆயத்தங்கள். பின் முதலில் குழந்தைகள் பின் மாமியார் நார்த்தனார் கொழுந்தன் என அனைவரும் உண்டபின் தன் கணவனுடன் உணவுண்பாள். அப்போது மணி இரவு பதினொன்றைத் தாண்டியிருக்கும்.
வீட்டில் எட்டு குழந்தைகள் ஐந்து பெரியவர்கள் இவளையும் சேர்த்து. எவ்வளவு வேலைகள் இருக்கும். அத்தனையையும் தன்னந்தனியளாக செய்வாள். இதனைத்தையும் தவிர வீட்டில் இரண்டு பசுக்களிருந்தன. அதனைக் கவனிப்பதும் இவள் வேலையே. இவள் வந்தால் தான் அவை உணவுண்ணும். இவள் வந்தால் தான் அவை பால் கறக்கும்.
சரி இவ்வளவு பெரிய குடும்பம் இன்றும் இருக்கிறதா இப்படியும் மாமியாரும் மருமகளும் இருக்கிறார்களா. இருக்காது இது முன்பெப்போதோ நடந்த கதையாக இருக்கும் என்று நீங்கள் எண்ணினால் அது தவறு. இப்போது இவளுடைய கடைசி மகள் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறாள்.
இந்த அவள் கல்யாணமாகிப் போன இதே ஊரில் பிறந்தவள். இரண்டு அண்ணன்கள் இரண்டு தம்பிகளுக்கு நடுவில் ஒரே பெண்ணாகப் பிறந்தவள். ஓரளவு வசதியாய் செல்லமாய் வளர்ந்தவள்.
இப்போது தன் தாய் வீட்டிற்கு வருவது கூட அரிதாகப் போனது.
எந்நேரமும் கணவர், மாமியார், நார்த்தனார் ஒரு கொழுந்தன் மற்றும் எட்டு குழந்தைகள் என அனைவருக்குமாய் சுழல்கிறது அவளுலகம். அதைத் தாண்டி அவளுக்கென தனியாய் ஒரு ஆசாபாசங்களில்லை.
இது எல்லாருக்கும் குறிப்பாக எல்லா பெண்களுக்கும் உரிய விசயம்தானே எதனால் இவள் தேவதையானாள் என்று யோசித்தோமானால் தன் குழந்தைகளை எப்படிப் கவனித்துக் கொள்வாளோ அப்படியே மற்ற ஐந்து குழந்தைகளையும் பார்த்து பார்த்து முகங் கோணாது தன் குழந்தைகளை விட மேலாக கவனிப்பதினாலேயே என்று கூடச் சொல்லலாம். இன்றளவும் தனிக் குடித்தனத்திற்கு தன்னை தன் கணவனை ஆயத்தபடுத்தாததை சொல்லலாம். அத்தனை கஷ்டங்களையும் தன்னுள்ளே புதைத்துக் கொண்டு சிரித்த வண்ணம் வளைய வருவதைச் சொல்லலாம். ஒட்டு மொத்த குடும்பத்திற்காக தன் கனவுகளைப் பொசுக்கிக் கொண்டு வாழ்கிறாளே அதற்காகச் சொல்லலாம்.
இந்தக் குடும்பத்திற்கு அந்த இரண்டாம் தம்பி இறந்த பின் இவளின் மாமனார் இறந்த பின்னரே நான் அறிமுகமானேன். இப்போது தேவதைக்கும் சரி தேவதையின் கணவருக்கும் சரி நான் அந்த இறந்து போன இரண்டாம் தம்பியின் இடத்தை நிரப்ப வந்தவனானேன். இன்றும் அவளை என் அண்ணியாக அவரை என் அண்ணனாக பாவிக்கிறேன்.
இந்த அண்ணியின் கையால் நான் பலமுறை உணவுண்டிருக்கிறேன். அதில் உள்ள சுவை அன்பாலானது.
இரவு மணி பன்னிரண்டோ அல்லது ஒன்றோ நான் அவர்கள் வீட்டிற்கு போகிறேன் என்றால் நான் பசியோடுதான் வருவேன் என்பதை என் தேவதை அறிவாள். உணவோடு தயாராய் இருப்பாள். எனக்கும் தலைவிக்கும் மகளுக்கும் காத்திருந்து எங்களுடனே உணவருந்துவாள். என் மகள் அவளுக்கு ஒன்பதாம் குழந்தையாகிப் போனாள். நானும் தலைவியும் பத்தாவதும் பதினொன்றாவதும்.