தேவதை - 5, 6

பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் பொழுது ஒரு நெருங்கிய நண்பன் ஒருவனின் வீட்டிற்கு அடிக்கடி போய் வருவது வழக்கம். முதல் மாடியில் இருந்த இரண்டு அடுத்தடுத்த வீடுகளில் அவனிருந்த இரண்டாவது வீட்டிற்கு முதற் வீட்டைத் தாண்டித்தான் போகவேண்டியிருக்கும். முதல் வீட்டில் இருந்தது ஐந்தாம் தேவதை.
என் நண்பனும் அவளும் நல்ல நண்பர்களாதலால் நானும் அவளுக்கு நட்பாகிப் போனேன். என்னைப் பற்றி ஏற்கனவே நண்பன் மூலம் எல்லா விசயங்களையும் தெரிந்து வைத்திருந்து பார்த்தவுடன் வாடாப் போடா என்றழைக்க ஆரம்பித்தாள். கொஞ்சம் பயந்து தான் போனேன்.
இரண்டாம் நாளில் தன் தாய்க்கும் தந்தைக்கும் என்னை அறிமுகம் செய்து வைத்தாள். அவர்களும் பிரியமாய் என்னை ஏற்றுக் கொண்டார்கள். தாய் தந்தை இருவரும் அரசு உத்தியோகஸ்தர்கள். காலையில் போனால் இரவில் தான் வருவார்கள். நானும் என் நண்பனும் எப்போது வேண்டுமானாலும் அவள் வீட்டிற்குப் போவோம். வருவோம். சில சமயங்களில் அவள் எங்களுடன் சைக்கிளில் சுற்ற கிளம்பிவிடுவாள்.
பல சமயங்களில் அது எங்களுக்கே கூட சங்கடங்களை தந்திருக்கின்றன.
நான் சொல்வது 1987 ஆம் வருடத்தில். திருநெல்வேலி எனும் சிறிய நகரத்தில். வயசுப் பையனும் வயசுப் பொண்ணும் பேசுவதைக்கூட காதல் என்று அர்த்தப் படுத்தும் காலம். ஊர். ஒரு வயசுப் பெண் சதா எங்களுடன் பேசிச் சிரித்து சைக்கிளில் ஒன்றாய் ஒரு பெண் சென்றால் என்ன செய்யும் ஊர். வக்கனையாய் பேசிச் சிரித்தது. எங்களுக்கு சங்கடமாய் இருந்தது. அவளைத் தவிர்க்கப் பார்த்தோம். அவள் முரண்டு பிடித்தாள். வலுவில் தவிர்க்க தன் தாய்தந்தையரிடம் எங்கள் மீது குற்றம் சுமத்தினாள்.
அவர்கள் எங்களிருவரையும் கூப்பிட்டு விசாரித்தார்கள்.
அவளை உடன் அழைத்துச் செல்வதில் என்ன பிரச்சினை. அவள் போக முடியாத இடத்திற்கு நீங்கள் இருவரும் போகிறீர்களா என்று கேட்டனர். அது எங்களுக்குக் கொடுத்த படிப்பினை. நீ போகிற ஒரு இடம் ஒரு பெண்பிள்ளையை உன்னால் கூட்டிப் போக முடியாத இடமெனில் நீயும் போகாதே என்ற கண்டிப்பு அது.
இல்லைப்பா. இவ எங்ககூட சுத்துறதினால பசங்க எல்லாரும் பக்கத்து வீட்டுல எல்லாரும் இவளை ஒரு மாதிரி பேசுறாங்கப்பா என்றான் நண்பன். நான் ஆமோதித்தேன்.
யாரைத் தப்பா பேசினாங்க உன்னையா இவனையா. இவளைத்தானே. அப்படின்னா என்ன பிரச்சினை என்று கேட்டார்கள் அவள் அம்மா.
எங்களைத் தப்பா பேசினாக் கூட பரவாயில்லை. இவளைப் பேசினா கேட்க முடியலையே என்று நான் கூறினேன்.
உன்னைய தப்பா சொன்னாக் கூட பரவாயில்ல. என் மகளைத் தப்பாச் சொன்னா உனக்கு கோவம் வருது பாரு. இதுதான் அவ மேல நீ வச்சிருக்கற அக்கறை. அந்த அக்கறையுள்ளவன் தான் அவளை ஸேஃபா பாத்துப்பான். அவளை வெளியூர்ல படிக்க அனுப்பினதுக்கே தப்பா பேசி பயங்காட்டினவங்க இவங்க. இவங்க பேச்சையெல்லாம் பெரிசா எடுக்காம இருக்குறதுதான் எம்பொண்ணுக்கு நான் செய்ற நல்ல விசயம். அவளுக்கு நான் கொடுத்துருக்கிறது உண்மையான சுதந்திரம்னா அவளை நான் நம்புறது தான். ஏம் பொண்ணு என் நம்பிக்கையை ஒரு நாளும் கெடுக்கப் போறதில்லை. உங்க ரெண்டு பேர் மேல நான் வச்சுருக்கிற நம்பிக்கை உண்மையானது. அதை நீங்க காப்பாத்துங்க.
இப்படி பேசினது அவளோட அம்மா.
பெண்களுக்கான சுதந்திரம் என்பது அவளது வீட்டிலிருந்து துவங்க வேண்டும். அப்போது தான் அவளால் வெளியுலகிலும் சுதந்திரமாய்ச் செயல்பட முடியும். வீட்டிலுள்ளவர்கள் அவளை முழுதாய் நம்ப வேண்டும். அவர்களின் நம்பிக்கைதான் அவளைப் பலப் படுத்தும்.
அந்த காலத்திலேயே இப்படி ஒரு சுதந்திரத்தை தாம் பெத்த பொண்ணுக்குக் கொடுத்தவங்க என்னோட ஆறாவது தேவதை.
இந்த இரண்டு தேவதைகளுக்கும் எங்களால முடிஞ்ச சந்தோசத்தை நாங்க கொடுத்தோம். அவளின் திருமணத்தின் போது நாங்கள் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தோம்.
இப்போது அவள் தன் கணவனுடன் அமெரிக்காவில் இருக்கிறாள். காலத்தின் பரபரப்பான பயணத்தில் இந்நட்பு இப்போது தொடர்பில் இல்லை. இருந்தாலும் எங்கள் மூவரின் நெஞ்சிலும் நீங்காமல் வாழும் அது.