தேவதை - 4

நான் ஒரு வேலையில் சேர்ந்து அவ்வேலையில் முற்றிலும் தோற்றுப் போனேன் என்று சொன்னால் , என்னால் அப்பணியை சிறப்பாக செய்யவே முடியவில்லை என்று சொன்னால் அது 1993ல் நான் ஒரு தனியார் கணிணி பயிற்றுவிக்கும் மையத்திற்கு மாணாக்கர்களை அழைத்து வருவதற்காக நியமிக்கப் பட்ட ரெப்ரசென்டேட்டிவ் வேலைதான். என்னால் கடைசி வரை அப்பணியில் சோபிக்க முடியாமலேயே போனது.
Concept Selling என்று சொல்வார்கள். உங்கள் கையில் எந்த ஒரு ப்ராடெக்டும் இருக்காது. கல்லூரிகளில் படிக்கும் இளைஞர்களின் வீட்டு முகவரிகளைத் தருவார்கள். நேரடியாக அவ்வீடுகளுக்குச் சென்று பெற்றோர்களைப் பார்த்துப் பேச வேண்டும். அவர்களுக்கு கம்ப்யூட்டர் கல்வியின் அவசியத்தை விளக்க வேண்டும். அதனால் என்னவெல்லாம் கிடைக்கும் என கூற வேண்டும். நாம் கூறுவதை வைத்து அவர்கள் நம் பயிற்சி பள்ளிக்கு தங்கள் பிள்ளைகளை / பிள்ளையை அனுப்பி வைக்க வேண்டும்.
தோற்றுக் கொண்டே இருந்தேன். இப்படி தோற்றுப் போவது கம்பனிக்கு இழப்பு. ஒவ்வொரு முகவரியும் அவர்களுக்கு தங்க முட்டையிடும் வாத்து மாதிரி. நான் அதன் கழுத்தை அறுப்பதாக அவர்கள் கருதினார்கள். இருந்தாலும் அவர்கள் என்ன காரணத்தினாலோ வேலையிலிருந்து நீக்கவில்லை.
அப்பயிற்சிப் பள்ளி இரண்டு முதலாளிகளை உடையது. ஒருவர் கன்னாபின்னாவென்று கத்துவார். இன்னொருவர் சமாதானமாக பேசுவது போலிருக்கும் ஆனாலும் அது வாழைப்பழ ஊசி. இப்படி இரண்டு பேரிடமும் தினசரி திட்டுகள் வாங்கிக் கொண்டிருந்த நேரம். எனக்கு ஆறுதலாய் இருந்தது அங்கே Front Office Counsellor ஆக இருந்த இந்த நான்காம் தேவதை.
ஒரே வயது எங்கள் இருவருக்கும். ஒரே படிப்பு இருவருக்கும். ஒரே கருத்துக்கள் இருவருக்கும். சட்டென்று நெருங்கிய நண்பர்களாகிப் போனோம். நிறைய பேசுவோம். படித்த புத்தகங்கள் பரிமாறிக் கொள்வோம். படித்த புத்தகங்களைப் பற்றி பேசுவோம். கவிதைகள் குறித்து பேசுவோம். நட்பு வலுவாயிற்று.
பொதுவாக நம் எல்லோருக்கும் ஒரு குணமுன்டு. எல்லா நண்பர்களிடமும் நம்முடைய எல்லா விசயங்களையும் நாம் பகிர்ந்து கொள்வது கிடையாது. நண்பர்களுக்கு மத்தியிலும் சில இரகசியங்கள் இரகசியங்களாகவே இருக்கும். இல்லையா. அதைத் தகர்த்தெரிந்தவர் இந்த தேவதை. அவரிடம் இரகசியம் என்பதே கிடையாது. எல்லாவற்றையும் மனந்திறந்து கூறிவிடும் தன்மை கொண்டவர். எனக்கு அது ஆச்சர்யமான விசயமாக இருந்தது.
இரண்டரை மாதங்களில் என்னால் தொடர்ந்து அவ்வேலையில் இருக்க முடியாது என்று தெளிவாய்த் தெரிந்த நாளில் நான் அவ்வேலையே விட்டு விட்டேன். ஆனாலும் எங்கள் நட்பு தொடர்ந்தது. நேரம் கிடைக்கும்பொழுதிலெல்லாம் அவரை அவரது அலுவலக தொலைபேசியில் PCOவிலிருந்து அழைப்பேன். பின் அவர் வீட்டிலோ அல்லது என் வீட்டிலோ அல்லது அரசனின் கேக் ஷாப்பிலோ சந்திப்போம் உரையாடுவோம். என்னிடம் காசெல்லாம் கிடையாது. அவர்தான் பணஞ்செலுத்துவார்.
நான் வேலையில் இல்லாமல் இருந்த சமயம் அது. அம்மாவுக்கு ஒரு ஆப்பரேஷன் செய்வதற்காக பாண்டி ஜிப்மரில் சேர்த்திருந்தோம். அங்கே பாண்டியில் பெரியம்மாவும் அண்ணனும் இருந்ததால் அவர்கள் அம்மாவைக் கவனித்துக் கொண்டார்கள். நான் இங்கே வேலைக்காக முயற்சியில் இருந்தேன். என்னை நீ வேலையெல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். அம்மாவின் உதவியாய் போய் இரு என்று கட்டளையிட்டது இந்த தேவதை.
நானும் அம்மாவைப் பார்த்துக் கொள்ள, ஆஸ்ப்திரியிலிருக்கும் அம்மாவுக்கும் பெரியம்மாவுக்கும் வீட்டிலிருந்து சாப்பாடு எடுத்துப் போக போன்ற சிறு சிறு உதவிகளை செய்வதற்காக பாண்டியிலேயே ஒரு மாத காலம் தங்கி விட்டேன். அப்போது அண்ணனின் முகரிக்கு கடிதமொன்று வந்தது. அனுப்புநரின் விலாசம் காலியாய் இருந்தது. அனுப்பநரின் பின்கோடு கட்டங்களில் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு எழுத்தென ஆங்கிலத்தில் FRIEND என்று எழுதியிருந்தது. இன்னமும் அக்கடிதம் என்னிடம் பத்திரமாய் இருக்கிறது.
இந்த தேவதையும் ஒருவரை காதலித்தது. அவரும் இவரைக் காதலித்தார். ஆனால் அது கல்யாணத்தில் முடியவில்லை. அந்த காதல் சில காரணங்களை காட்டி இவரைக் காதலித்தவராலாயே மறுதலிக்கப் பட்டது. அப்போது இந்ததேவதை துயரிலிருந்தது. ஆறுதலாய் நான் இவர் கரம் பிடித்து ஒன்றும் பேசாமல் மணிக் கணக்கில் அமர்ந்திருந்தேன்.
அதன் பின் இரு மாதங்களுக்குள் இவருக்கும் இவர் வீட்டார் திருமணம் செய்து வைத்தனர். என்னிடம் இவருக்கு பரிசளிக்க சல்லிக் காசில்லாத நாளில் திருமணம் நடைபெற்றது. எனக்குத் திருமணத்திற்குப் போக மனசில்லை. நெருங்கிய நண்பரின் மணவிழாவிற்கு பரிசில்லாமல் வெறுங்கையோடு எப்படிப் போவது. போவதா வேண்டாமா என்ற பெரும் போராட்டத்திற்குப் பின் மாலை வரவேற்புக்கு போனேன். வெகு நேரம் மண்டபத்தின் ஓரத்தில் தனியாளாய் அமர்ந்திருந்தேன். அவர் என்னைப் பாரத்து விட்டார். தன் தோழியை அனுப்பி என்னே மேடைக்கு வரச் சொன்னார். கூனிக் குறுகி மேடையேறினேன். என்னை தன் புதுக் கணவனுக்கு அறிமுகப் படுத்தினார். நான் அவர் கையைப் பற்றிக் குலுக்கனேன். இந்த தேவதை என் கையைப்பற்றிக் கொண்டது. சிரிக்க மறந்த என்னே சிரிக்க வைத்தது. சாப்பிட்டுட்டு போ என்றது. நான் சாப்பிடவில்லை. வெளியேறினேன்.
அன்றுதான் இந்த தேவதையைக் கடைசியாகப் பார்த்து. அது தன் புதுக் குடும்பத்திற்காகச் சிறகடிக்கத் துவங்கிற்று.