தேவதை - 3

இந்த மூன்றாவது தேவதையைப் பற்றிச் சொல்வதற்கு முன்னால் அவள் காதலித்து கரம்பிடித்த கணவனின் குடும்பத்தைப் பற்றி தெரிந்து கொள்வது முக்கியம்.
அவர் பெயரை மட்டும் சொன்னால் யாருக்கும் சட்டென அடையாளம் தெரியாது. அவர் வேலையான குமாஸ்தா என்று சேர்த்து சொன்னால் மட்டுமே தெரியும். ஏற்கனவே தெருவில் நாற்சந்து சந்திக்கும் இடத்தில் ஒரு வீடுண்டு. வீடு என்றால் நல்ல பெரிய வளவு வீடு. அது போக வருகிற வருமானத்தில் மேலும் இரண்டு வீடுகளை அதே தெருவில் வாங்கி வைத்திருந்தார். தன்னுடைய மூன்று பிள்ளைகளுக்கும் மூன்று வீடு என்ற கணக்கில்.
மூன்று பிள்ளைகளும் படிப்பில் கோட்டை விட்டனர். மூத்தவனுக்காவது சொல்லிக் கொள்ளுமளவிற்கு ஒரு பள்ளியில் கடைநிலை உதவியாளர் வேலை கிடைக்க மற்ற இரண்டு பேரும் தறி கெட்டலைந்தனர். இரண்டாமவன் ஒரு தனி நபரிடம் வேலைக்குப் போய்விட்டான். தனி நபரிடம் என்ன வேலை கிடைக்கும். சொல்வதைச் செய்வது மட்டுந்தான் வேலை. ஆனால் அதிலேயே காசு பார்க்கவும் ஆரம்பித்து விட்டான். மூன்றாமவன் ஆட்டோ ஓட்ட ஆரம்பித்துவிட்டான். நம் தேவதை இவனைத்தான் காதலித்தாள்.
ஆட்டோ ஓட்டுவது நல்ல தொழில். நல்ல வருமானம். அதிகப் படியான உழைப்பை கொட்ட வேண்டிய தொழில் . எப்போதும் வாடிக்கையாளர்களான பயணிகளிடம் முகஞ்சுழிக்காது பேசிப் பழக வேண்டும். இது கைவந்து விட்டால் நல்ல தொழில். சீக்கிரம் உயர்ந்தும் விடலாம். எங்கள் வீட்டிற்கு பக்கத்து வீட்டு பையன் இதற்கொரு உதாரணம். இன்று இவனிடம் மூன்று ஆட்டோக்களும் ஒரு டொயட்டொ காரும் இருக்கிறது. எல்லாம் லோன் போட்டு எடுத்தவை. கடனையெல்லாம் சரிவர கட்டி வருபவன்.
ஆனால் நம் தேவதையின் காதலன் இப்படி இல்லை. ஏற்கனவே அப்பாவின் சம்பாத்தியத்தில் வாங்கிய ஆட்டோ. கடனெல்லாம் கட்ட வேண்டியதில்லை. கைமேல் காசு வருகிறது. பார்த்துக் கொள்ள கவனித்துக் கொள்ள என எந்த பொறுப்புமில்லை. என்ன செய்வான். இளமையில் வறுமை எவ்வளவு கொடுமையோ அவ்வளவு கொடுமை இளமையில் கையில் அளவுக்கதிகமாக காசு புழங்குவதும்.
பார்க்குமிடங்களிலெல்லாம் காசை இறைத்தான். குடி கூத்து என்று முன்னாளில் சொல்வார்களே அதைப் போல. இரவானால் குடிப்பான். குடித்தால் மங்கையரைத் தேடிப் போவான். இதற்கு ஊறுகாயைத் தொட்டுக் கொள்வது போல நடுவில் தேவதையைக் காதலித்தான்.
தேவதைக்கு அறிவுரை கூறாதவர்களே இல்லையெனலாம். காதலிப்பவர்களுக்கு அறிவுரை கூறுவதென்பது என்பது விழலுக்கு நீரிறைப்பது போல வீணாகும். அது நம் தேவதையின் விசயத்தில் உண்மையானது. கடைசியில் தேவதை அவனைக் கரம்பிடித்தாள்.
அவனைக் கரம்பிடித்த கொஞ்ச நாட்களிலேயே கணவனின் தகப்பனார் இறந்து போக அவர் ஏற்கனவே எழுதியிருந்த உயிலின் பிரகாரம் நம் தேவதையின் கணவனுக்கு ஒரு வீடு தந்தை வழிச் சொத்தாய் சொத்தின் பங்காய் வந்து சேர்ந்தது.
ஒரு தேவதையைக் கரம்பிடித்தவன் எத்தனை சந்தோசங்களை அடைந்திருக்க முடியும். அத்தனை சந்தோசங்களை பாழாக்காமல் அனுபவித்து வந்தாலே அது தேவதைக்குச் செய்யும் பிரதி உபகாரமாய் இருந்திருக்கும்.
ஆனால் நம்மவனோ குடியை விட முடியாமல் இருந்தான். உடற்கேடு உண்டானது. அதனால் ஆட்டோ ஓட்ட முடியாமற் போனது. ஆட்டோ ஓடவில்லை என்றால் சம்பாத்தியம் இல்லை. தொடர்ந்து சம்பாத்தியமில்லை என்றால் எதைக் கொண்டு சாப்பிடுவது. அப்பா குடியிருக்க வீடு மட்டுமே தந்து விட்டுப் போனார். நிலபுலன்கள் இல்லையே.
எனவே தன் வீட்டின் ஒரு பகுதியை விற்றான். கொஞ்சம் காசு வந்தது.
கொஞ்ச நாட்கள் சந்தோசமாய்க் கழிந்தது. கணவனின் உடல் நலம் தேற்றினாள் தேவதை. மீண்டவன் ஆட்டோ ஓட்டக் கிளம்பினான். தேவதை சந்தோசமடைந்தாள். இனி எல்லாம் சுகமே என நினைத்தாள். ஆனால் மீண்டும் அவன் குடிக்க ஆரம்பித்தான். இவள் சங்கடங்களில் மூழ்கினாள். மீண்டும் பணக்கஷ்டம்.
இம்முறை தேவதை எடுத்த முடிவு வெகு தீர்க்கமாயிருந்தது.
ஆட்டோவை அடகு வைத்தாள். பணம் வாங்கினாள். இந்த முறை தானே ஆட்டோவை ஓட்டவும் முடிவெடுத்தாள். ஊரே அவளை வியந்து பார்த்தது. காலையில் குடும்பத்தின் வேலைகளை முடித்து சவாரிக்குக் கிளம்புவாள். தெரிந்தவர்களின் சவாரி மட்டுமே.அதற்கே அவளுக்கு நாளின் மணி நேரங்கள் போதவில்லை. வரும் வருமானத்தைச் சிக்கனமாய்ச் செலவு செய்தாள். அடமானத்திலிருந்த ஆட்டோவை மீட்டாள். வீட்டிலேயே இருந்த கணவனையும் குடிப் பழக்கத்திலிருந்து மீட்டாள்.
இப்போதெல்லாம் அவன் குடிப்பதில்லை. இவளும் ஆட்டோ ஓட்டுவதில்லை.