தேவதை - 2

பொதுவாக எல்லார் வீட்டிலும் வறுமை கொலுவிருந்த காலகட்டம் அது. தெருவின் மொத்தம் நாற்பது வீடுகளில் ஒன்றிரண்டு வீடுகளிலேயே பெரிய தனக்காரர்கள் இருந்தார்கள். அப்படியெரு வறுமையான வீட்டில் பிறந்த மூன்று குழந்தைகளில் முன்னும் பின்னும் ஆண்குழந்தைகளிருக்க அண்ணனுடனும் தம்பியுடனும் நடுவில் பிறந்தவள் இந்த இரண்டாம் தேவதை.
எல்லாரையும் போல அவளுக்கும் பால்ய காலம் சந்தோசங்களால் நிரம்பியிருந்தாலும் அவளின் தந்தை திடீரென நோய்வாய்ப்பட குடும்பத்தின் ஒரே வருமானமும் நின்றுவிட மூத்த பிள்ளைகளான அண்ணனும் தேவதையும் படிப்பை அப்படியே பத்தாவதிலும் எட்டாவதிலும் நிறுத்திக் கொண்டு கிடைத்த வேலைக்கு போக ஆரம்பித்தனர். இருவரின் வருமானமும் தந்தையின் நோய்க்கென செலவாக குடும்பம் மிவும் தத்தளித்தது.
ஒரு நாள் தந்தை இறந்துவிட்டார். ஊரில் அடுத்தடுத்த வீடுகளில் இருந்த அவர்களின் உறவினர்கள் யாரும் சரிவர உதவாத நிலையில் மேலும் இடிந்து போனது அக்குடும்பம்.
இந்த தேவதையின் வயதொத்த அவளுடன் விளையாடிய மற்ற அத்தனை தேவதைகளும் பள்ளிச் சீருடையில் தாவணி அணிந்து பள்ளிக்குச் செல்கையில் இவள் மட்டும் மெயின் ரோட்டிலிருந்த கெமிக்கல் கம்பனியின் சீருடையான நீலக் கலர் ஆண்பிள்ளை சட்டை அணிந்து செல்வது வழக்கமாயிருந்தது. ஆனால் அதுவும் அத்தேவதைக்கு பிடித்தமான ஒன்றாய் மாறிப்போனது.
இவரது உறவுக்காரரொருவர் இவளுக்கு திருமணம் பேசி முடித்து வைக்க முன்வந்தார். அவருக்குத் தெரிந்த ஒரு பணக்கார குடும்பத்தில் வரன் பார்த்திருப்பதாகவும் மாப்பிள்ளை வீட்டார் வரதட்சிணையாக மிகச் சொற்பமான பணமே கேட்பதாகவும் கூற இத்தேவதைக்கும் அவள் குடும்பத்தினருக்கும் ஏன் அவர்களையறிந்த அனைவருக்கும் மகிழ்ச்சியான தருணமாய் அமைந்தது.
எல்லோரையும் போல தேவதையும் திருமணத்திற்குத் தயாரானாள். வெகு சிக்கனமாக திருமணம் நடைபெற்றது. மாப்பிள்ளை வீட்டிலிருந்து மிஞ்சிப் போனால் ஒரு ஐந்து அல்லது ஆறு பேர்தான் வந்திருந்தார்கள். பெண் வீட்டின் உறவினர்களே அதிகம். காலையில் பதினோரு மணிக்கு தாலி கட்டி மதிய உணவு பரிமாறி திருமணம் இனிதே நடந்தேறிய நாளில் இரவு எட்டு மணிக்கு மாப்பிள்ளை வீட்டார் மாப்பிள்ளையை தேவதை வீட்டில் விட்டுவிட்டு கிளம்பிப் போக அரை மணிநேரத்தில் மாப்பிள்ளையானவன் ரோடெல்லாம் கத்திக் கொண்டே ஓட ஆர்மபித்து விட்டான். அப்போது தான் எல்லாருக்குமே தெரியவந்தது அவன் மனம் பிசகியவன் என்று.
இத்திருமணத்தை நடத்தி வைத்த உறவினருக்கு முன்னமேயே தெரிந்து தான் இருந்திருக்கிறது. அவர் அதை திருமணத்திற்கு முன்னர் வரை மறைத்திருக்கிறார். இவர்களது வறுமையைக் காரணம் காட்டி அவனுடன் அவன் வீடு சென்று குடும்பம் நடத்துமாறு தேவதையை வற்புறுத்தி இருக்கிறார்.
பதிமூன்று வயதிலிருந்து வேலைக்குச் சென்று குடும்ப பாரத்தை தன் அண்ணனுடன் பகிர்ந்த தேவதைக்கு இந்த துரோகம் பெரும் தைரியத்தை அந்த இரவில் தந்து விட்டது. திருமணத்தை நடத்தி வைத்த உறவினரிடம் நேருக்கு நேராய் நின்று எனக்கு திருமணம் நடத்தி வைத்ததிற்கு மிக்க நன்றி. ஆனால் நான் இவருடன் வாழ்க்கை நடத்த முடியாது. எனவே நீங்கள் அவரைக் கொண்டு அவர் வீட்டில் கொண்டு போய் விட்டு விடுங்கள். இல்லையெனில் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என்று தீர்க்கமாய் சொல்லிவிட ஊரின் முக்கிய பெரியவர்களும் தேவதைக்கு ஆதரவாய் நின்று விட்டார்கள். ஊரே ஒரு பெண்ணுக்கு ஆதரவாய் நின்ற இரவு இன்னும் எங்கள் நினைவிலுண்டு.
அவளின் வேண்டுகோளுக்கிணங்க இரவோடு இரவாக மாப்பிள்ளை வீட்டார்கள் வந்து அவனை அழைத்துக் கொண்டு போய்விட்டார்கள். ஊரின் முக்கிய பெரியவரின் உதவியோடு தேவதையின் இன்னொரு உறவினர் சட்டபூர்வமான திருமணத்தினின்று விடுதலையைப் பெற்றுத் தந்தார்.
பின்னர் அந்த உறவினரே அவர் வசித்த ஊருக்கு தேவதையை அழைத்துக் கொண்டு போய்விட்டார். அங்கே அந்த தேவதை சில காலம் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தது. அங்கே வேலை செய்து வந்த இன்னொரு நல்லுள்ளம் தேவதையின் கதையறிந்து மனமுவந்து திருமணம் செய்து கொண்டது. அந்த நல்ல உள்ளமும் இன்னொரு தேவதையே.
இத்தேவதை தம்பதிகளுக்கு இன்று திருமண வயதில் அழகான தேவதை இருக்கிறாள். அவள் ஒரு பொறியிற் பட்டதாரி.