தேவதை - 1

அவளை நான் என் வயதைக் கணக்கில் கொண்டு பார்த்தால் அக்காவென்றே அழைக்க வேண்டும். ஆனால் அப்படி அழைக்கவில்லை. காரணமென்னவென்று கேட்டால் ஒரே வகுப்பில் படித்ததால் இருக்கலாம். ஒன்றாய் பாம்பு கட்டமோ, அல்லது தாயக்கட்டமோ அல்லது சீட்டாட்டமோ சிறு வயதில் விளையாடிய காரணமாய் இருக்கலாம்.
நாங்கள் ஒன்றாய் துவக்கப் பள்ளிக்கு போனோம். ஒன்றாய் வீடு திரும்பினோம். ஒன்றாய் விளையாடிக் கழித்தோம். ஒன்றாய் வெளித் தாழ்வாரத்தில் அம்மாவின் கையால் உணவுண்டோம். அதனாலேயே அவளை நான் பெயர் சொல்லியே அழைத்து வந்தேன்.
எங்கள் வீடு அப்பொழுது நான்கு குச்சு வீடுகள் கொண்ட வளவு வீடு. அதில் ஒரு வீடு அப்போது காலியாய் இருந்தது. அதையும் எங்கள் உபயோகத்திற்கு என உபயோகித்து வந்தோம் அப்போது. பொதுவாக அந்த வீடு தான் எங்களனைவருக்கும் இன்டோர் ஸ்டேடியம். வெய்யில் அதிகமாயிருக்கும் மதிய வேளைகளில் அம்மாவும் அப்பாவும் வெளியில் சென்று விளையாட அனுமதிக்காத அப்படி அனுமதிக்காவிடின் மீறிப் போகத் தெரியாத வயது அது. அப்போது அந்த இரண்டாம் குச்சில் தான் நாங்களிருப்போம்.
எப்போதும் விளையாட்டில் எனக்கு ஜோடி அந்த தேவதை தான். பரமபதத்தில் நான் ஏணியில் ஏறினால் அவளுக்கு குதூகலிப்பாய் இருக்கும். அவள் பாம்பு தீண்டி இறங்குகையில் எனக்கு அழுகை வரும். எவ்வளவு நேரம் விளையாடினாலும் மாலையானால் அவரவர் வீட்டிற்கு போய்விடுவோம். அவரவர் வீடென்றால் அடுத்தடுத்த குச்சு வீடுகளே.
நான் மாலையில் நான்கு மணிக்கெல்லாம் வெளியில் ஆற்றங்கரையில் சர்கிட்டவுஸில் எறிபந்து விளையாட ஏழுகல் விளையாட பம்பரம் விளையாடப் போய்விடுவேன். இரவு ஏழு ஏழரைக்குத் தான் திரும்ப வருவேன். இரவு உணவுக்கு எல்லாரும் அவரவர் சோற்றுத்தட்டை எடுத்துக் கொண்டு வெளித் தாழ்வாரத்தில் கூடுவதுண்டு.
இப்படி ஒன்றாய் விளையாண்ட பருவத்தில் புரியாத புதிராய் ஒரு நாள் அவளை அதே குச்சு வீட்டில் தனித்து உக்கார வைத்தனர். எங்களையும் அவளைத் தொடாதே பக்கத்தில் போகாதே என்றெல்லாம் கட்டளையிட்டனர். முதன்முதலில் விளையாட்டுப் பருவத்தில் விழுந்த பிரிவு. பின் ஒவ்வொரு மாதமும் அவள் இப்படி உலக்கைக்குப் பின் அமர்ந்திருப்து வாடிக்கையானது.
அதற்குப் பின்னான நாட்களில் அவளை அவள் வீடு என்னுடன் ஏன் எங்களுடன் இருந்த எல்லா ஆண்பிள்ளைகளுடன் விளையாட அனுமதிக்கவில்லை. அவளுக்கு எப்போதும் வீட்டில் வேலைகள் காத்திருந்தன. பல சமயங்களில் வீடு பெருக்கிக் கொண்டோ பாத்திரங்கள் கழுவிக் கொண்டோ இருந்தாள்.
நானும் சற்று பெரியவனாகி வேறு பள்ளிக்குப் போய்விட்டேன். என்னுடைய கவனங்கள் வேறு பக்கம் திரும்பிவிட்டாலும் இந்த தேவதையைப் பார்க்கும் பொழுதிலெல்லாம் அவளுடன் அருகிருக்க முடியாத அவளிடம் பேசமுடியாத வலி நெஞ்சினோரத்தில் இருந்து கொண்டேயிருந்தது.
சில வருடங்களில் அவர்கள் வீடு மாறிப் போய்விட எங்களிடையே தூரமும் அதிகரித்துவிட மனதிற்குள் நான் இன்னமும் நொறுங்கிப் போனேன். காலங்கள் இன்னும் வேகமாய் ஓட கல்லூரி முடித்த தருணம். தேவதையை பன்னிரண்டாம் வகுப்புடனேயே நிறுத்தி விட்டார்கள். அவளை விட பத்து வயது மூத்த அவளுடைய உறவினர் ஒருவருக்கு அவளை திருமணம் நிச்சயத்து விட்டார்கள்.
எங்கள் வயதொத்த பால்ய சிநேகிதர்களில் முதன் முதலில் திருமணம் இந்த தேவதைக்குத்தான நிகழந்தது. அவளுக்குத் திருமணமானதற்கு எனக்கு எவ்வளவு சந்தோசங்களிருந்தனவோ அவ்வளவு வருத்தங்களிருந்தன.
அவளுடைய வயதிற்கேற்ற துணை கிட்டியிருக்கலாம். பிறந்த வீட்டில்தான் வறுமை புகுந்த வீட்டிலாவது அது இல்லாமலிருந்திருக்கலாம். இங்கு தான் நெட்டி முறிக்கிற வேலைகளதிகம். அங்காவது ஒரு ஆசுவாச நிலையிருந்திருக்கலாம்.
சில தேவதைகளுக்கு இப்படியே வாழ்க்கை அமைந்து விடுகிறது. இதை அவர்கள் சந்தோசமாய் ஏற்றுக் கொண்டும் விடுகிறார்கள்.
என் மகளுக்கு ஒரு பன்னிரண்டு வயதாகும் பொழுது ஒரு நாள் அந்த தேவதை எங்கள் வீட்டிற்கு வந்திருந்தாள். ஒல்லியான ஒடிசலான தேகம். அதே மாறாத சிரிப்பு. பார்த்த கணத்தில் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது இருவருக்கும். அவள் கையைப் பற்றினேன். அதில் பால்ய சிநேகிதத்தின் அழுத்தம் தெரிந்தது.