சில தேவதைகளின் கதைகள் - முன்னுரை

சமீபத்தில் நானெழுதிய ஒரு கவிதையைப் படித்த நண்பர் ஶ்ரீதேவி ரம்யா இக்கவிதை ஒரு பொண்ணு எழுதியதைப் போல ஒரு நளினம் கவிதையினூடே இளையோடுகிறதென என்னிடம் சொன்னார். அப்போது நானவருக்கு ஆம். என்னுள் எப்போதும் ஒரு வலி மிகுந்த பெண்ணொருத்தி இருக்கிறாள் என்று பதிலுரைத்தேன். அது முற்றிலும் உண்மை.
எல்லாருடைய வாழக்கையைப் போல என்னுடைய வாழ்க்கையும் பெண்களால் சூழப்பட்டு பெண்களால் வழி நடத்தப் பட்ட ஒன்றுதான். இரண்டு மூத்த சகோதரிகள் ஒரு இளைய சகோதரி பெரியம்மா அம்மா என ஐந்து பெண்களுக்கு மத்தியில் பெரியப்பா அப்பா அண்ணன் நான் என நான்கு ஆண்கள் இருந்த வீடு எங்களுடையது.
இத்தனை பெண்களுக்கு நடுவில், அவர்களின் சந்தோச தருணங்களையும் துக்க தருணங்களையும் பார்த்து பார்த்து வளர்ந்தவனுக்கு பெண்ணின் நளினம் இயல்பாய் வருகிறது.
வீட்டுப் பெண்களைத் தவிர அக்கம்பக்கத்தில் இருந்தவர்களை பெரியம்மா சித்தி சித்தப்பா அக்கா மாமா அண்ணா அண்ணி என உறவு முறை சொல்லி அழைத்து வளர்ந்தவன் என்பதினாலும் அந்நளினம் மேலும் கூடிப் போயிற்று.
அப்படி நான் வாழ்ந்த சூழலில் என் கண்முன்னே வாழந்த சில பெண்களின் கதையை பெயரின்றி உறவு முறைகளில் சொல்ல நினைக்கிறேன். இவர்கள் எல்லாருமே எங்களூர் தேவதைகள் தான்.
இந்த தேவதைகளுக்கு சிறகுகளுண்டு. அதே விரித்து அவர்கள் படபடத்து பறந்த கதைகளுண்டு.
இந்த தேவதைகளுக்கு கண்ணீர் உண்டு. அக்கண்ணீர் என்னுடைய பல காயங்களுக்கு மருந்தாய் மாறியிருக்கின்றன.
அவர்களின் அந்தந்த தருணங்களை அப்படியப்படியே சொல்கிறேன்.